உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாஜி அமைச்சர் வீட்டு முன் எலக்ட்ரிக் வெடி

மாஜி அமைச்சர் வீட்டு முன் எலக்ட்ரிக் வெடி

புதுச்சேரி: புதுச்சேரியில் முன்னாள் அமைச்சர் வீட்டின் முன்பு கிடந்த எலக்ட்ரிக் வெடியால் பெரும் பரபரப்பு நிலவியது.புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக ஜிப்மர் மருத்துவமனை, கவர்னர் மாளிகை, முதல்வர் வீடு, பிரபல ஓட்டல்கள் மற்றும் வழிபாட்டு தளங்களுக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறை மிரட்டல் வருவதும், போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் சென்று சோதனை நடத்தி, புரளி என்பதை உறுதி செய்வதும் தொடர்கதையாக உள்ளது.இந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, 'டார்க் மெயிலில்' மிரட்டல் கடிதம் அனுப்பிய மர்ம நபரை தேடிவருகின்றனர்.இந்நிலையில், புதுச்சேரி ஒயிட் டவுன் பகுதியான சுய்ப்ரேன் வீதியில் உள்ள காங்., கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஷாஜகான் வீட்டு வாசலில் நேற்று காலை எலக்ட்ரானிக் வெடி பொருட்கள் கிடந்தன.இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து சென்று பார்வையிட்டனர். அங்கு சுமார் 12 செ.மீ., நீளம், 1.5 செ.மீ., விட்டத்தில் மஞ்சள் மற்றும் ரோஸ் நிறத்தில் இரண்டு வெடிகள் கிடந்தன. அதில் மின்சார ஒயர் இருந்தது.அதிர்ச்சியடைந்த வெடிகுண்டு நிபுணர்கள் அதனை பாதுகாப்பாக எடுத்துச் சென்று சோதனை செய்தனர். அதில், திருமணம் மற்றும் கோவில் திருவிழா மேடைகளில் பயன்படுத்தப்படும் மிளிரும் எலக்ட்ரானிக் பட்டாசு என்பதை உறுதி செய்தனர். இருப்பினும், வெடித்த பட்டாசுகளை முன்னாள் அமைச்சர் வீட்டின் முன் வீசியது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !