சென்னை: மத்திய தணிக்கை அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மின் நுகர்வு அல்லது விற்பனை மீதான வரி சட்டத்தின் கீழ், மின் வரியை, மின் கட்டணங்களுடன் வசூலித்து, வரியை அரசு கணக்கில், மின் வாரியத்தின் துணை நிறுவனமான, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செலுத்த வேண்டும். 2019 - 2023 கால கட்டத்தில், மின் பகிர்மான கழகம், நுகர்வோரிடம் இருந்து மின்சார வரியாக, 5,493 கோடி ரூபாய் வசூலித்ததில், 4,264.61 கோடி ரூபாயை செலுத்தியது. பின், 142.16 கோடி ரூபாயை இந்த ஆண்டு செலுத்தியது. நடப்பாண்டில், 1,985 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், 1,457.75 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தியது. 2019 முதல் 2024 மார்ச் வரை, 7,478 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், அரசு கணக்கில் செலுத்தப்பட வேண்டிய தொகை, 7,316 கோடி ரூபாய். ஆனால், 6,809 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது. எனவே, செலுத்தப்படாத மின்சார வரி, 507.43 கோடி ரூபாய் உள்ளது. வசூலிக்கப்பட்ட வரி தொகையை, நீண்ட காலத்திற்கு, அரசு கணக்கில் செலுத்தாமல் வைத்திருப்பது, தற்காலிக பண மோசடிக்கு வழி வகுக்கக் கூடும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.