முதல்வர் மருந்தகம் துவக்க நிர்பந்தம் கூட்டுறவு நிறுவனங்களுக்கு தர்மசங்கடம்
சென்னை:முதல்வர் மருந்தகம் துவக்குமாறு, நிதி நெருக்கடியில் உள்ள கூட்டுறவு சங்கங்கள், பண்டகசாலைகளுக்கு, அரசு தரப்பில் நெருக்கடி கொடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்துஉள்ளன. கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள், 'காமதேனு' உள்ளிட்ட பெயரில், 300க்கும் மேற்பட்ட மருந்தகங்களை நடத்துகின்றன. அவற்றில், வெளிசந்தையை விட சற்று குறைந்த விலைக்கு மருந்து, மாத்திரைகள் விற்கப்படுகின்றன. தற்போது, முதல்வர் மருந்தகம் துவக்க, கூட்டுறவு நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது. ரூ.3 லட்சம்
இதுகுறித்து, கூட்டுறவு பண்டகசாலை இணை பதிவாளர் ஒருவர் கூறியதாவது:தமிழக அரசு சார்பில், குறைந்த விலையில், மக்களுக்கு மருந்து, மாத்திரைகள் கிடைக்க, 1,000 முதல்வர் மருந்தகங்கள் அமைப்பதற்கான அறிவிப்பு, 2024ல் வெளியிடப்பட்டது. இந்த மருந்தகங்களை, மருந்தாளுநர் படிப்பு முடித்துள்ள நபர்கள் வாயிலாக துவக்க முடிவு செய்யப்பட்டது. ஒரு முதல்வர் மருந்தகம் அமைக்க, அரசு, 3 லட்சம் ரூபாய் மானியம் வழங்குவதாக தெரிவித்தது. மருந்தகம் அமைக்க ஆர்வம் உள்ள நபர்களிடம் இருந்து அரசு விண்ணப்பம் பெற்றது. மானியம் மிகவும் குறைவாக இருந்ததால், மருந்தகம் அமைக்க தனியார் ஆர்வம் காட்டவில்லை. கடந்த ஜனவரி வரை, 43 தொழில் முனைவோர் மற்றும், 167 கூட்டுறவு சங்கங்களுக்கு, முதல்வர் மருந்தகம் துவக்க, தலா, 1.50 லட்சம் ரூபாய் மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. தனியார் ஆர்வம் காட்டாத நிலையில், எஞ்சியுள்ள அனைத்து முதல்வர் மருந்தகங்களையும் கூட்டுறவு நிறுவனங்கள் சார்பில் துவக்குமாறு, அரசு உயரதிகாரிகள் நெருக்கடி தருகின்றனர். ஏற்கனவே ஒவ்வொரு சங்கமும், 10 முதல், 15 மருந்தகங்களை நடத்துகின்றன. அவற்றில், வாங்கிய விலைக்கு, மருந்து விற்கப்படுவதால், ஊழியர்கள் சம்பளம், மின்கட்டணம் போன்ற செலவுகளை சமாளிக்க முடியவில்லை. நிதி நெருக்கடி
இம்மாதம், 15ம் தேதி முதல்வர் மருந்தகங்களை துவக்க சொல்கின்றனர். பல சங்கங்கள் கடும் நிதி நெருக்கடியில் உள்ளன. முதல்வர் மருந்தகத்திற்கு அரசு வழங்கும், 3 லட்சம் ரூபாய் மானியம், மருந்து, மாத்திரைகளை வைக்க கட்டமைப்பு வசதி மற்றும், 'பிரிஜ், ஏசி' போன்றவற்றுக்கே போதாது. சங்க நிதியை செலவு செய்து, முதல்வர் மருந்தகங்களை துவக்கினால், மேலும் நிதி நெருக்கடி ஏற்படும். இதனால், கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு கூட சம்பளம் வழங்க முடியாத சூழல் ஏற்படும். இதை அறிந்த ஊழியர்கள், முதல்வர் மருந்தகம் துவக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே, கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக, முதல்வர் மருந்தகம் துவக்க நிர்பந்தம் செய்வதை, முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.