சி.எம்.டி.ஏ.,வில் அமலாக்கத்துறை சோதனை
சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில் 5 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.2011 முதல் 2016 வரை அ.தி.மு.க., ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். அப்போது, ரூ.28 கோடி லஞ்சம் பெற்றதாக, அவரின் மகன்கள் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தஞ்சாவூரில் ஒரத்தநாடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது உறவினர் வீட்டிலும் சோதனை நடந்தது.இதன் தொடர்ச்சியாக, சென்னை எழும்பூரில் உள்ள சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் எனப்படும் சி.எம்.டி.ஏ., அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். வழக்கு தொடர்பாக சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் அன்ஷூல் மிஸ்ராவிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.