மதுபான ஆலை நிர்வாகிகளிடம் அமலாக்கத்துறை விசாரணை
சென்னை:'டாஸ்மாக்' ஊழல் தொடர்பாக, கோவையில் செயல்படும் மதுபான ஆலை நிர்வாகிகளிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில், 'சிவா டிஸ்டில்லரீஸ்' என்ற மதுபான ஆலை நிறுவனம் செயல்படுகிறது. இது, பண்ணாரி அம்மன் குழுமத்திற்கு சொந்தமானது. இந்த நிறுவனம், தமிழகத்தில் மிகக் குறைந்த அளவிலேயே, டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்களை விற்பனை செய்கிறது. பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு தான், அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறது.கடந்த மாதம், டாஸ்மாக் அலுவலகம் உட்பட பல இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். அதன் அடிப்படையில், சிவா டிஸ்டில்லரீஸ் நிர்வாகிகளை வரவழைத்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தங்கள் அலுவலகத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.