சமத்துவம் என்பதே சனாதனம் தமிழக கவர்னர் ரவி பேச்சு
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைகுளம், தாமரை பதியில் நடைபெற்ற அய்யா வழி ஆய்வு மைய அடிக்கல் நாட்டு விழா மற்றும் அகிலத்திரட்டு அம்மானை உதய தின புனித யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்ற தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:சனாதனத்திற்கு ஆபத்து ஏற்படும் போது, நாராயணன் அவதரிக்கிறார். சனாதனம் என்றால் சமத்துவம். சமத்துவம் என்றால் சனாதனம். பல மொழிகள் பேசலாம்; பல உணவு பழக்கங்கள் இருக்கலாம்; பல உடைகள் அணியலாம்; பல வழிபாட்டு முறைகள் இருக்கலாம். ஆனாலும், அனைவரும் ஒரே குடும்பத்தின் உறுப்பினர்கள் என்பது தான், சனாதன தர்மம்.'அனைவரும் சகோதர, சகோதரிகள். நமக்குள் ஏற்றத்தாழ்வு கிடையாது' என, அய்யா வைகுண்டர் கூறினார். சனாதனத்திற்கு இரண்டு பிரச்னைகள் இருந்தன. ஒன்று நமக்குள் இருந்த ஜாதி ஏற்றத்தாழ்வு. மற்றொன்று பிரிட்டிஷ் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள். அந்த காலகட்டத்தில் தான் மகாவிஷ்ணுவாக அய்யா அவதாரம் செய்தார்.அய்யாவின் அகில திரட்டு புத்தகம் அச்சடிக்க தொடங்கி உள்ளோம். வீடுகள் மற்றும் பள்ளிகள் தோறும் இந்த புத்தகம் செல்ல வேண்டும். உலகம் முழுதும் உள்ள வன்முறையை தவிர்க்க அய்யா வழி தான் ஒரே தீர்வு. கலியுகம் முடிந்து, தர்மயுகம் வருமென்று அய்யா கூறியுள்ளார். பிரதமர் மோடி தர்மயுகத்தை நோக்கி, நாட்டை அழைத்துச் செல்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.