ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அ.தி.மு.க., - தே.மு.தி.க., புறக்கணிப்பு
சென்னை:ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணிப்பதாக, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.இடைத்தேர்தல் பற்றி ஆலோசிப்பதற்காக, அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், நடந்தது. பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில், கடந்த 2023ல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடந்தபோது நடந்த நிகழ்வுகளையும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்தது பற்றியும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.பின், பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:தி.மு.க., ஆட்சிக்கு வரும் போதெல்லாம், அக்கட்சியினரால் நிகழ்த்தப்பட்ட வன்முறை சம்பவங்கள் எண்ணிலடங்காதவை. கடந்த முறை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், பணம், மது, கொலுசு, குக்கர், தங்க காசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் அள்ளி இறைக்கப்பட்டன.இவை எல்லாவற்றையும் தாண்டி, தி.மு.க.,வின் மிரட்டல், அப்பாவி மக்களை பெருமளவில் அச்சுறுத்தியது. வாக்காளர்களை பட்டியில் அடைத்த அவலமும் நடந்தேறியது. தி.மு.க.,வினர் அழைக்கும் இடத்திற்கு வந்து, காலை முதல் இரவு வரை இருக்க வேண்டும். இல்லையெனில், முதியோர் உதவித் தொகையோ, வேறு எந்த அரசு நலத் திட்டங்களும் வழங்கப்படாது என்ற மிரட்டப்பட்டனர். அதற்குப் பயந்து, மக்கள் சொந்த மண்ணில் அகதிகளைபோல நடத்தப்பட்ட விதத்தை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது. இவ்வாறு ஆட்சி, அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து, மக்களாட்சியின் மகத்துவத்தை மறந்து, வன்முறையில் ஈடுபடுவது மட்டுமே, தி.மு.க.,வின் வாடிக்கை.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், பண பலம், படை பலத்துடன் பல்வேறு அராஜகங்கள், வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு, மக்களை சுதந்திரமாக ஓட்டளிக்க விட மாட்டார்கள்.தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடக்காது. எனவே, பிப்ரவரி 5ல் நடக்கவுள்ள ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை, அ.தி.மு.க., புறக்கணிக்கிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தே.மு.தி.க.,வும் புறக்கணிப்பு
அ.தி.மு.க.,வை தொடர்ந்து, அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க.,வும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா, 'தமிழகத்தில் இதுவரை நடக்காத தேர்தலாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், ஆடுகளை மந்தையில் அடைத்து வைப்பதுபோல, மக்களை அடைத்து வைத்து தி.மு.க., வென்றது. அதே பாணி இடைத்தேர்தல் தான் மீண்டும் நடக்கப் போகிறது. எனவே, ஜனநாயகத்திற்கு விரோதமாக நடக்கும் இந்த இடைத்தேர்தலை தே.மு.தி.க., புறக்கணிக்கிறது' என கூறியுள்ளார்.