தங்கம் விலை உயர்ந்தாலும் தினமும் 15,000 கிலோ விற்பனை!
சென்னை: சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் தங்கம் விலை எப்போதும் இல்லாத வகையில், தினமும் அதிகரித்து வந்தாலும், மக்கள் தங்க நகைகள் வாங்குவது குறையவில்லை. இதனால், தங்கம் விற்பனை வழக்கம் போல, தினமும் சராசரியாக, 15,000 கிலோவாகவே உள்ளது. தமிழகத்தில் சிறியது, நடுத்தரம், பெரியது என, மொத்தம், 35,000 நகைக்கடைகள் உள்ளன. இவற்றில் மொத்த பணமும் கொடுத்து புதிய நகைகள் வாங்குவது, பழைய நகைகளை கொடுத்து, புதிய நகைகள் வாங்குவது என, தினமும் சராசரியாக, 15,000 கிலோ தங்க நகைகள் விற்பனையாகின்றன. தங்கம் பாதுகாப்பான முதலீடாக இருப்பதால், வசதியானவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், ஏழை மக்கள் என, அனைத்து தரப்பினரும் தங்கம் வாங்குகின்றனர்.அமெரிக்க அதிபர் டிரம்ப், கூடுதல் வரி விதிப்பது உள்ளிட்ட காரணங்களால், சர்வதேச முதலீட்டாளர்கள் பங்கு சந்தை சார்ந்த முதலீடுகளை தவிர்த்து, தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்வதுடன், நம் நாட்டிலும் அதன் விலை உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், ஆபரண தங்கம் சவரன் விலை, 85,000 ரூபாயை தாண்டி, 85,120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதற்கு முன், இந்த அளவுக்கு தங்கம் விலை உயர்ந்ததில்லை.இப்படி விலை உயர்ந்தாலும், நகைக்கடைகளில் தங்கம் விற்பனை பாதிக்கப்படவில்லை. தினமும் சராசரியாக விற்பனையாகும், 15,000 கிலோ தங்க நகைகள் தற்போதும் விற்பனையாகின்றன. இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் தங்கம் விலை தொடர்ந்து, புதிய உச்சத்தை எட்டி வருகிறது. வரும் நாட்களில், தங்கம் விலை மேலும் உயரும் என்பதால், தற்போது, மக்கள் தங்க நகைகளை தயக்கமின்றி வாங்குகின்றனர். இதனால், விலை உயர்ந்த போதிலும், தமிழகத்தில் தங்கம் விற்பனை பாதிக்கப்படாமல் எப்போதும் போலவே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சவரனுக்கு ரூ.720 உயர்வு
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 720 ரூபாய் உயர்ந்து, 85,120 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராம், 10,550 ரூபாய்க்கும், சவரன், 84,400 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 159 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 90 ரூபாய் உயர்ந்து, 10,640 ரூபாய்க்கும், சவரனுக்கு, 720 ரூபாய் அதிகரித்து, 85,120 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.வெள்ளி கிராமுக்கு அதிரடியாக ஆறு ரூபாய் உயர்ந்து, 159 ரூபாய்க்கு விற்பனையானது.