உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமர் திட்டத்தில் வீடு பெறும் தகுதியை இணையதளத்தில் அறிந்துகொள்ள வசதி

பிரதமர் திட்டத்தில் வீடு பெறும் தகுதியை இணையதளத்தில் அறிந்துகொள்ள வசதி

சென்னை:'பி.எம்.ஏ.ஒய்., எனப்படும், பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், வீடு பெற விரும்பும் பயனாளிகளுக்கான தகுதி விபரங்களை, இணையதளத்தில் அறிந்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது' என, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். 'அனைவருக்கும் வீடு' என்ற அடிப்படையில், பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம், 2015ல் துவக்கப்பட்டது.இதன்படி, நகர்ப்புற பகுதிகளில், ஏழை மக்களுக்கு, மாநில அரசுடன் சேர்ந்து, வீடு கட்டி கொடுப்பது, நிலம் வைத்துள்ள மக்கள் வீடு கட்ட மானியம் வழங்குவது, வங்கிக்கடனில் வீடு வாங்குவோருக்கு, வட்டியில் மானியம் வழங்குவது என, மூன்று பிரிவுகளாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்திற்கான அவகாசம் முடிந்த நிலையில், இரண்டாம் கட்டம் 2024ல் துவக்கப்பட்டது. முதல் கட்டத்தில், தமிழகத்தில் 6.80 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டதில், 5.99 லட்சம் வீடுகளின் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.இரண்டாம் கட்டத்தில், பயனாளிகளை தேர்வு செய்வது உள்ளிட்ட நடைமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. இதனால், பயனாளிகளுக்கான தகுதி விபரங்களை பொதுமக்கள் அறிந்து, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க, இணையதளத்தில் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தில், பொதுமக்கள் எவ்வாறு பயன் பெறலாம் என்ற தகவல்களை இணையதளத்தில் தெரிவித்து வருகிறோம்.சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு அல்லது நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு செல்லாமல், இணையதளத்தில் பொதுமக்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் தங்கள் தகுதி நிலையை அறிந்து, அதன் அடிப்படையில் உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்யலாம். தகுதியான விண்ணப்பம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில், உரிய பிரிவுக்கு அனுப்பி வைக்கப்படும். இதனால், பொது மக்கள் அலைச்சல் இல்லாமல், எளிதாக வீடு பெற வழி ஏற்படும். பொது மக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.இதற்கான இணையதள முகவரி: https://pmaymis.gov.in/ PMAYMIS2_2024/PMAY_SURVEY/EligiblityCheck.aspxஇவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை