சொத்துக்கான நில வரைபடங்களை சரிபார்க்கும் வசதி; உதவ மறுக்கும் வருவாய் துறையினர்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: பத்திரப்பதிவின் போது, சம்பந்தப்பட்ட சொத்துக்கான நில வரைபடங்களை, 'ஆன்லைன்' முறையில் சரி பார்க்கும் வசதியை அளிப்பதில், வருவாய் துறை அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. பதிவு செய்யப்படும் சொத்துக்களின் உண்மை தன்மையை சரிபார்க்க, பதிவுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, பதிவுக்கு வரும் சொத்தின் பட்டா உள்ளிட்ட ஆவணங்களை, சார் - பதிவாளர்கள் ஆய்வு செய்கின்றனர். பட்டாவில் குறிப்பிடப்படும் சர்வே எண், உட்பிரிவு எண், பரப்பளவு போன்ற விபரங்களை, ஆன்லைன் முறையில் சரிபார்க்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், போலி ஆவணங்கள் அடிப்படையில், நில மோசடியில் ஈடுபடுவோரை தடுக்க வழி ஏற்பட்டுள்ளது. இதற்காக, பதிவுத் துறையின், 'ஸ்டார் 2.0' மென்பொருள் வாயிலாக, வருவாய் துறையின், 'தமிழ் நிலம்' தகவல் தொகுப்பை இணைக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழ் நிலம் தகவல் தொகுப்பில் இருந்து, ஒவ்வொரு நிலத்தின் வரைபடம், பட்டா போன்ற முழுமையான விபரங்கள், பதிவுத்துறையுடன் பகிரப்படும் என, 2024ல் தமிழக அரசு அறிவித்தது. இது குறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழக அரசு அறிவித்தபடி, தமிழ் நிலம் தகவல் தொகுப்பு விபரங்களை உடனுக்குடன் சார் - பதிவாளர்கள் பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், இதில் தற்போதைய பட்டா விபரங்களை மட்டுமே பார்க்க முடிகிறது. ஊரகப்பகுதி நிலங்களின் நில அளவை வரைபடங்களை பார்க்க முடிகிறது. வருவாய் துறையினரின் ஒத்துழைப்பு இல்லாததால், நகர்ப்புற பகுதிகளின் நில வரைபடங்களை பார்க்க முடியவில்லை. மக்கள் நலன் கருதி, இந்த வசதியை முழுமையாக செயல்படுத்த, வருவாய் துறையினர் ஒத்துழைக்க வேண்டும். அப்போது தான், பதிவுக்கு வரும் சொத்தின் அளவுகள், எல்லைகள் குறித்த விபரங்களை துல்லியமாக சரி பார்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.