திருப்புவனம் அஜித்குமார் இறப்பு சம்பவம் தொடர்பாக என்னை பற்றி தவறான தகவல் பேராசிரியை நிகிதா கண்ணீர் வீடியோ
சிவகங்கை:என்னை பற்றி தவறான தகவலை பரப்புகின்றனர். என் மன உறுதியை சோதிக்கவே கடவுள் என்னை இது போன்று சோதிக்கிறார் என நினைத்து நான் செயல்படுகிறேன்,' என மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காரில் இருந்த நகையை திருடியதாக புகார் அளித்த திருமங்கலம் பேராசிரியை நிகிதா,கண்ணீர் மல்க ஆடியோ வெளியிட்டுள்ளார்.ஆடியோவில் அவர் பேசியதாவது: நான் வேதனை, துயரத்தோடு இந்த தகவலை அனுப்புகிறேன். ஒரு பெண் படித்து மேலே வந்து வேலைவாங்கி தனது தாய், தகப்பனை காப்பாற்றுவது பெரிய சவாலாக தான் உள்ளது.ஒரு பெண் முன்னேறினால் விடமாட்டார்கள். ஏனென்றால் சமுதாயத்தில் ஒரு பெண்ணுக்கு அவ்வளவு நீதி தான் கிடைக்கிறது. மடப்புரம் காவலாளி அஜித்குமார் மரணம் என்னையும், என் தாயையும் பெரிதும் வேதனையில் ஆழ்த்தியது. தலைமறைவு இல்லை
போலீசார் அஜித்குமாரை தாக்கிய போது வீடியோ எடுத்த சக்தீஸ்வரன், அன்றைக்கு எங்களுடன் தான் இருந்தார். நான் அமைதியாக இருக்கிறேன் என்பதற்காக நான் குற்றவாளி இல்லை. இது கூட கடவுள் என் மனஉறுதியை அறிய சோதிக்கிறார் என்று தான் நினைக்கிறேன். அதே போன்று நான் கல்லுாரிக்கு செல்லாமல் தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். கல்லுாரி துவங்கியதும், ஜூன் 16 அன்று ஒரு நாள் மட்டுமே திண்டுக்கல்லில் உள்ள கல்லுாரிக்கு சென்றேன். அதற்கு பின் என் அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்காக அவருடன் இருப்பதால், கல்லுாரிக்கு செல்லவில்லை. எந்த உயர் அதிகாரியையும் தெரியாது
என் சொந்த வாழ்க்கையில் எவ்வளவோ துரோகிகளையும், துயரங்களையும் சந்தித்துள்ளேன். இன்றைக்கு மீடியாவில் யோக்கியர்கள் போல் சிலர் பேசி வருகின்றனர். அவர்களது வாழ்க்கையை திரும்பி பார்த்தால் தெரியும். எனக்கு எந்த உயர் அதிகாரியும் தெரியாது. தமிழக முதல்வர் ஸ்டாலினை மரியாதை நோக்குடன் தான் பார்க்கிறேன். அவர் தான் மடப்புரம் அஜித்குமார் இறப்பிற்காக 'சாரி' கேட்டார்.இறந்த அஜித்குமாரின் தாய் மாலதியின் உணர்விற்கு மதிப்பு அளித்து தான் முதல்வர் மன்னிப்பு கேட்டுள்ளார். வாய்ப்பு கிடைத்தால் நானும் மாலதியிடம் மன்னிப்பு கேட்பேன்.எனக்கு எந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளையும் தெரியாது.அஜித்குமார் இறப்பை திசை திருப்பவே, எனது தனிப்பட்ட வாழ்க்கை, வரலாற்றை பரப்பி வருகின்றனர். என் அப்பா நேர்மையான அதிகாரி. ஒவ்வொரு ஆண்டும் கலெக்டரிடம் அவரது பணிக்காக விருது வாங்கியவர். நாங்கள் கோயம்புத்துாரில் தான் வாழ்ந்தோம். என் அப்பா, அம்மாவின் கடனுதவி மூலம் தான் திருமங்கலம் அருகே கிராமத்தில் வீடு கட்டி குடியேறினோம். நாங்கள் 2011 ல் அதிகாரத்தை பயன்படுத்தியதாக கூறுகின்றனர்.பிரச்னைக்கு காரணம் தி.மு.க., நிர்வாகிஓய்வுக்கு பின் அரசு அதிகாரிகளுக்கு எந்தளவிற்கு மரியாதை கொடுப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த பிரச்னைக்கு முழு காரணம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியை சேர்ந்த தி.மு.க., ஒன்றிய நிர்வாகி தான். அவர் தான் என்னை அசிங்கப்படுத்தும் நோக்கில் செயல்படுகிறார்.ஆலம்பட்டியில் உள்ள கல்லுாரியில் நடந்த படப்பிடிப்பிற்காக என் காரை சில ஆண்டுக்கு முன் அந்த தி.மு.க., நிர்வாகி கேட்டார். நான் தர முடியாது என்றேன். இதனால் என் மீது கோபமும், வெறுப்பும் அடைந்தார். அந்த முன்பகையால் தான் திருப்புவனம் காவலாளி அஜித்குமார் இறந்த சம்பவத்தில் என்னை பற்றி பொய்யான தகவலை பரப்பி வருகிறார். நான் தெய்வத்தை மட்டுமே முழுமையாக நம்பி இருக்கிறேன். விதி வலியது, கடவுள் என்ன சொல்கிறாரோ அதை கேட்பேன். சட்டத்திற்கு மரியாதை தருகிறேன். அஜித் குமார் இறப்பு எனக்கு மனவேதனை அளிக்கிறது, இவ்வாறு பேசியுள்ளார்.