பணமில்லாமல் விவசாயிகள் பரிதவிப்பு சம்பா சாகுபடி பணிகள் திடீர் பாதிப்பு
சென்னை: பணமில்லாமல் விவசாயிகள் பரிதவிப்பதால், பல மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுதும், நீர் நிலைகளில் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது. இதனால், ஜூன் மாதம் முதல் விவசாயிகள் உற்சாகமாக, சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். நடப்பாண்டு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, குறுவை பருவ நெல் சாகுபடி, 6.09 லட்சம் ஏக்கரில் நடந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில், 13 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி நடந்துள்ளது. இவற்றின் அறுவடை தற்போது நடந்து வருகிறது. நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதால், அறுவடை முடித்த கையுடன், சம்பா பருவ நெல் சாகுபடியில் ஈடுபட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் மட்டுமின்றி, பணப்பட்டுவாடாவும் தாமதமாகிறது. தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில், பயிர் கடன் பெற, 'சிபில் ஸ்கோர்' பார்க்கப்படுகிறது. இதனால் பல விவசாயிகள் கடன் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. நகை மற்றும் பொருட்கள் மீதான கடன் வட்டியும் பல மடங்கு எகிறி உள்ளது. இதனால், சாகுபடிக்கு பணமில்லாமல், பல மாவட்ட விவசாயிகள் தவித்து வருகின்றனர். சம்பா சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதை வேளாண் துறையினர் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் கூறியதாவது: நெல் சாகுபடியை, இப்போது துவங்கினால் தான், வடகிழக்கு பருவமழையை தாக்குப்பிடித்து பயிர்கள் நிற்கும். காலதாமதம் செய்வதால், வயல்களில் வெள்ளநீர் தேங்கி பயிர்கள் அழிந்து விடும். நடப்பாண்டு சம்பா சாகுபடி உதவிகளும், அமைச்சர், உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி நிறுத்தப்பட்டு உள்ளன. வங்கி கடனுக்கும் கெடுபிடி விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், சம்பா சாகுபடி பரப்பு குறையும் வாய்ப்புள்ளது. இந்த சாகுபடி பருவத்தில் தான், அரசு மற்றும் தனியார் அரிசி தேவை பெருமளவில் பூர்த்தி செய்யப்படுகிறது. சாகுபடி குறைந்து தேவை அதிகரித்தால், அரிசி விலை கணிசமாக உயரும். எனவே, சாகுபடியை அதிகரிக்க தேவையான உதவிகளை, வேளாண்துறை கால தாமதமின்றி வழங்க வேண்டும். கூட்டுறவு துறையினர் கடன்களை வழங்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.