முன்கூட்டியே குறுவை தொகுப்பு திட்டத்தை செயல்படுத்தும்படி விவசாயிகள் வலியுறுத்தல்
சென்னை: 'ஜூன் மாதம் வரை காத்திருக்காமல், குறுவை தொகுப்பு திட்டத்தை முன்கூட்டியே செயல்படுத்த வேண்டும்' என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், குறுவை பருவ நெல் சாகுபடி, ஜூன் மாதம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, அதே மாதம், 12ம் தேதி, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. குறுவை சாகுபடியை ஊக்குவிக்க, அ.தி.மு.க., ஆட்சியில், குறுவை தொகுப்பு திட்டத்தை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, 2016ல் அறிமுகம் செய்தார். அன்று முதல் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு தேவையான சாகுபடி உதவிகள் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு, 58 கோடி ரூபாய் மதிப்பில் மானிய உதவிகள் வழங்கப்பட்டன. இதை பயன்படுத்தி, 3.87 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்தது. நடப்பாண்டும் இத்திட்டம் தொடர உள்ளது. டெல்டா அல்லாத மாவட்டங்களிலும், குறுவை தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக, 120 கோடி ரூபாயில், நெல் இயந்திர நடவு மானியம், தரமான சான்று பெற்ற விதைகள், உயிர் உரங்கள், நுண்ணுாட்ட சத்துக்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம், சிறப்பான திட்டமாக இருந்தாலும், அதை செயல்படுத்துவதில், ஒவ்வொரு ஆண்டும் காலதாமதம் ஏற்படுகிறது. மேட்டூர் அணை திறக்கப்பட்டு, விவசாயிகள் சாகுபடியை துவங்கிய பின், திட்ட உதவிகள் சென்றடைகின்றன.இதை நம்பி காத்திருக்கும் விவசாயிகள், குறித்த நேரத்தில் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, குறித்த காலத்திற்குள் பயனாளிகள் தேர்வை முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து, இந்திய விவசாயிகள் கூட்டமைப்பின் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும் குறுவை தொகுப்புக்கு, குறித்த காலத்தில் நிதித்துறை நிதி ஒதுக்குவதில்லை. இதனால், கடைசி நேரத்தில் திட்டத்தை அரைகுறையாக வேளாண் துறை செயல்படுத்துகிறது. தகுதியான விவசாயிகளுக்கு பயன் சென்று சேர்வது கிடையாது. நடப்பாண்டு டெல்டா மட்டுமின்றி, அனைத்து மாவட்டங்களிலும் குறுவை தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே, மே இறுதிக்குள், பயனாளிகள் பட்டியலை இறுதி செய்ய வேண்டும். ஜூன் முதல் வாரத்தில் பயனாளிகளுக்கு திட்ட உதவிகளை வழங்க வேண்டும். அப்போது தான், குறுவை தொகுப்பு திட்டத்தின் பயன்கள் முழுமையாக விவசாயிகளை சென்றடையும்.இவ்வாறு அவர் கூறினார்.