தெரு நாய்களுக்கு வீட்டில் வைத்து உணவளியுங்கள்: கோர்ட் கண்டிப்பு
புதுடில்லி: 'தெரு நாய்களுக்கு உணவளிக்க விரும்புவோர் தாராளமாக தங்கள் வீட்டில் வைத்து உணவளித்துக் கொள்ளலாம்' என, உச்ச நீதிமன்றம் காட்டமாக கூறியுள்ளது.உத்தர பிரதேசத்தின் நொய்டாவில், தெரு நாய்களுக்கு உணவளிப்பதால் தாங்கள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. தெரு நாய்கள் பாதுகாப்பு தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் பிறப்பித்த உத்தரவுகள் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தன.விலங்கு வதை தடுப்பு சட்டப்படி, தெரு நாய்களைப் பாதுகாக்க உத்தரவாதம் அளிக்கப்படும் அதே வேளையில், அவற்றால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.மேலும் கிரேட்டர் நொய்டாவில், மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் நாய்களுக்கு உணவளிக்க தனி இடம் உருவாக்கும்படி மனுதாரர் சார்பில் கோரப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கூறியதாவது:நீங்கள் காலையில் சைக்கிள் ஓட்டுகிறீர்களா? அப்படி சென்று பாருங்கள் என்ன நடக்கிறது என்று தெரியும். நாடு முழுதும் சாலையில் நடந்து செல்லும் முதியோர், குழந்தைகளை தெரு நாய்கள் கடித்து கொல்கின்றன. காலை நடைப்பயிற்சி செல்பவர்கள், இருசக்கர வாகனம், சைக்கிள் ஓட்டுபவர்களும் ஆபத்தில் உள்ளனர்.விலங்குகள் மீது அக்கறை கொண்ட, தாராள மனம் படைத்தவர்களுக்காக ஒவ்வொரு சாலையையும் திறந்து விட முடியுமா? இங்கு விலங்குகளுக்கு இடங்கள் உள்ளன. ஆனால் மனிதர்களுக்குதான் இடமில்லை. உங்கள் சொந்த வீட்டில் ஏன் அவற்றிற்கு உணவளிக்கக்கூடாது? யாரும் உங்களைத் தடுக்கப் போவதில்லை.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.