| ADDED : நவ 30, 2024 09:47 AM
சென்னை: பெஞ்சல் புயல் நெருங்க, நெருங்க சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது. வங்கக்கடலில் உருவாகி உள்ள பெஞ்சல் புயல் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே இன்று(நவ.30) மாலை அல்லது நாளை (டிச.1) காலை கரையைக் கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்கத்தில் இன்று மதியம் கரை கடக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில் அதன் நிலை தற்போது மாறி உள்ளது.பெஞ்சல் புயல் 7 கி.மீ, வேகத்தில் நகர்ந்த நிலையில் அதன் வேகம் தற்போது 12 கி.மீ. ஆக மாறி இருக்கிறது. சென்னையில் இருந்து 140 கி.மீ. தொலையில் நிலை கொண்டுள்ள புயல் மேலும் அருகில் நெருங்க,நெருங்க அதன் தாக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையின் முக்கிய பகுதிகளான சென்னை சென்ட்ரல், கிண்டி, மயிலாப்பூர், அண்ணா சாலை, பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை, கோயம்பேடு என பல பகுதிகளில் இடைவிடாது மழை கொட்டி வருகிறது. ராயபுரம் உள்ளிட்ட வட சென்னை பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. புயல் இன்னமும் கரையைக் கடக்காத நிலையில் மழை தொடர்ந்து பெய்து கொண்டு இருக்கிறது. இந்த சூழலில் புயல் இன்று(நவ.30) மதியம் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதன் நிலை மாறி உள்ளது. இன்று (நவ.30) மாலை அல்லது நாளை (டிச.1) கரையை கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கரையை கடக்கும் காலநிலையில் மாறுபாடு இருப்பதால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழைப்பொழிவு மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகி உள்ளது. பெஞ்சல் புயல் மெதுவாக நகருவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. புயலானது மேலும் நெருங்க, நெருங்க, மழையும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. சென்னையில் பெய்து வரும் கனமழை, மேலும் மேலும் வலுக்கும் என்று தெரிகிறது. சென்னையில் காற்றின் வேகமும் அதிகரிக்கலாம் என்றும் கருதப்படுகிறது.