உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வருமான வரி செலுத்தும் குடும்பத்தினரை தவிர்த்து மற்றவர்களுக்கு உரிமைத்தொகை நிதித்துறை ஒப்புதல்

வருமான வரி செலுத்தும் குடும்பத்தினரை தவிர்த்து மற்றவர்களுக்கு உரிமைத்தொகை நிதித்துறை ஒப்புதல்

சென்னை: மகளிர் உரிமைத் தொகை கோரி, புதிதாக விண்ணப்பித்துள்ளவர்களில், வருமான வரி செலுத்தும் குடும்பத்தினரை தவிர்த்து, மற்றவர்களுக்கு உரிமைத் தொகை வழங்க நிதித்துறை ஒப்புதல் வழங்கி உள்ளது. தி.மு.க., தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு 2023 செப்டம்பரில் துவக்கியது. இந்த திட்டத்தில் பயன்பெற, தகுதியான நபர்களை தேர்வு செய்ய, ஒன்பது வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், 1.15 கோடி மகளிர் மட்டும், இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள், அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், அவர்கள் குடும்ப ஓட்டுகள், எதிர்க்கட்சிகளுக்கு செல்லும் நிலை உள்ளது. இதை தடுக்க, மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரிக்க, அரசு முடிவெடுத்துள்ளது. 'உங்களுடன் ஸ்டாலின் முகாம்' வாயிலாக, மகளிர் உரிமைத்தொகை வழங்கக் கோரி, புதிதாக 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் தகுதியானவர்களுக்கு, டிசம்பர் மாதம் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என, துணை முதல்வர் உதயநிதி சட்டசபையில் அறிவித்தார். அதன்படி தகுதியான பயனாளிகளை இறுதி செய்யும் பணிகளில், வருவாய் துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர். வருமான வரி செலுத்தும் குடும்பத்தினரை தவிர்த்து, மற்ற குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு, மகளிர் உரிமைத் தொகை வழங்க, தமிழக நிதித்துறை ஒப்புதல் வழங்கி உள்ளது. எனவே, புதிய பயனாளிகளுக்கு, டிசம்பரில் மகளிர் உரிமைத் தொகை விடுவிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை