உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிவாரணம் வழங்காவிட்டால் போராட்டம்: மீனவர் சங்கம் அறிவிப்பு

நிவாரணம் வழங்காவிட்டால் போராட்டம்: மீனவர் சங்கம் அறிவிப்பு

சென்னை:'பத்து ஆண்டுகளுக்கு மேல், மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படாததால், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மந்தமாக உள்ளது. மேலும் மீனவர்கள் புயல் நிவாரண நிதி உள்ளிட்ட சலுகைகளை பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது' என, மீனவர்கள் தெரிவித்தனர்.இது குறித்து, அனைத்து மீனவர்கள் சங்க தலைவர் நாஞ்சில் ரவி கூறியதாவது:தமிழகத்தில், 800க்கும் மேற்பட்ட மீனவர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. சென்னையில் மட்டும் 60 சங்கங்கள் உள்ளன. இவற்றுக்கு, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல் நடக்கவில்லை. விரல் விட்டு எண்ணும் அளவில், சில சங்கங்களுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்பட்டு உள்ளன. முறையாக தேர்தல் நடக்காததால், மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் சேர்க்கை முறையாக நடத்தப்படவில்லை.ஆங்காங்கே சிலரை மட்டும் சேர்த்து, கணக்கு காட்டுகின்றனர். சங்கத்தில் உறுப்பினராக முடியாததால், பல மீனவர்கள் அரசின் சலுகைகளை பெற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.துாத்துக்குடி, மீனவர் சங்க உறுப்பினர் ரோமால்ட் கூறியதாவது: மீன்வளத்துறை வாயிலாக, மீன்பிடி தடை கால நிவாரணத் தொகை 8,000; புயல் சேமிப்பு நிவாரணத் தொகை, 4,500; மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகை, 6,000 ரூபாய், ஒவ்வொரு ஆண்டும் மீனவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிவாரணத் தொகைகள், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில், மே மாதம் இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்திற்குள் வழங்கப்படுவது வழக்கம்.இந்த ஆண்டு இது வரை வழங்கப்படவில்லை. சிலருக்கு, ஏதேனும் ஒரு தொகை வந்துள்ளது. இது குறித்து துாத்துக்குடி மீன்வள இணை இயக்குநர் அலுவலகத்தில் கேட்டதற்கு, 'வங்கி கணக்கு எண்ணை தவறாக கொடுத்திருப்பீர்கள்; அதனால் வந்திருக்காது' என்கின்றனர். அப்படியானால், ஒரு நிவாரணத் தொகை மட்டும் எப்படி வந்திருக்கும் என கேட்டால், 'மீன்வளத்துறையில் நிதி இல்லை' என்கின்றனர். மீனவர்களுக்கான நிவாரணத் தொகையை உடனடியாக வழங்காவிட்டால், துாத்துக்குடி மீன்வள இணை இயக்குநர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை