உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிழக்கு கடலோர பகுதிகளில் இன்று முதல் 61 நாட்கள் மீன் பிடிக்க தடை அமல்

கிழக்கு கடலோர பகுதிகளில் இன்று முதல் 61 நாட்கள் மீன் பிடிக்க தடை அமல்

சென்னை : தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட கிழக்கு கடலோர பகுதிகளில், இன்று முதல், 61 நாட்களுக்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், வரத்து குறைவாக இருக்கும் என்பதால், மீன்கள் விலை உயரும்.கடல் உயிரிகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில், கடல் பகுதி வாரியாக ஆழ்கடலில் மீன்பிடிக்க, ஆண்டுக்கு 61 நாட்கள் மத்திய அரசு தடை விதித்து வருகிறது. இதன்படி, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட கிழக்கு கடலோர பகுதிகளில், இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு துவங்குகிறது. இந்த தடைக்காலம், ஜூன் 14 வரையிலான, 61 நாட்கள் அமலில் இருக்கும்.தடை காரணமாக, திருவள்ளூரில் துவங்கி கன்னியாகுமரி வரை உள்ள கடலோர மாவட்டங்களில், மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மாட்டார்கள். மாநிலம் முழுதும், 20,000 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல், துறைமுகங்களில் நங்கூரமிட்டு நிறுத்தப்படும். அதேநேரம், சிறு கட்டுமரங்கள், பைபர் படகுகள் வாயிலாக மீன்பிடிக்க எந்த தடையும் இல்லை. தடையால் மீன்வரத்து குறையும் என்பதால், மீன், இறால், நண்டு போன்றவற்றின் விலை இரு மடங்கு உயர வாய்ப்புள்ளது.இந்த தடைக்காலத்தில், மீனவர்கள் தங்களின் படகுகளை பழுதுபார்த்தல், வலைகளை புதுப்பித்தல், மீன்பிடி உபகரணங்களை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர். சிறிய கட்டுமர மீனவர்கள் மட்டும் கடலில் சிறிது துாரம் சென்று மீன் பிடித்து வருவர். இதுகுறித்து, மீனவ சங்கத்தினர் கூறுகையில், 'மீன்பிடி தடைக்கால நிவாரணமாக, மீனவர்களுக்கு, 8,000 ரூபாய் மட்டுமே அரசு வழங்குகிறது. இதை, 25,000 ரூபாயாக உயர்த்த வேண்டும். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மீன்பிடி தடை காலத்தை அமல்படுத்த வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி