உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுற்றுச்சூழல் மாசு புகார்களை விசாரிக்க மேலும் 5 மாவட்டத்தில் பறக்கும் படை

சுற்றுச்சூழல் மாசு புகார்களை விசாரிக்க மேலும் 5 மாவட்டத்தில் பறக்கும் படை

சென்னை : சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவது தொடர்பான புகார்களை விசாரிக்கும் பறக்கும் படையை, மேலும் ஐந்து மாவட்டங்களில் அமைக்க, மாசு கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் நீர், நிலம், காற்று போன்றவற்றில் மாசு ஏற்படுத்துவதை தடுக்க, மாசு கட்டுப்பாடு வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அத்துடன், மாசு தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகார்களை விசாரிப்பதுடன், மாசு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களையும் தொடர்ந்து கண்காணிக்கிறது. மக்களின் உயிருக்கு ஆபத்தான மாசு ஏற்படுத்தப்படுவது குறித்து தெரிய வந்தால், அதற்கு காரணமான நிறுவனங்களை கண்காணிக்க, பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ளவர்கள், புகார் வந்ததும், சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று மாதிரிகளை சேகரித்து, அவற்றை பரிசோதிக்க நடவடிக்கை எடுப்பர். அதுமட்டுமின்றி, நீர் நிலைகள் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் சோதனையிலும் ஈடுபடுவர். இதுதொடர்பாக, மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தொழிற்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுமக்கள் வாயிலாக ஏற்படும், மாசு தொடர்பான புகார்களை விசாரிக்கவும், கண்காணிக்கவும், சென்னை, ஈரோடு, சேலம், திருப்பூர், வேலுார் மாவட்டங்களில் பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது புதிதாக, மதுரை, திருச்சி, கடலுார், கோவை, திருநெல்வேலி மாவட்டங்களில் பறக்கும் படை அமைக்கப்பட உள்ளது. இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து, 2.35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை