உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ‛கலைமாமணி பட்டம் பெற்ற நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார்

‛கலைமாமணி பட்டம் பெற்ற நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார்

சென்னை: நாட்டுப்புற பாடகியான கலைமாமணி கொல்லங்குடி கருப்பாயி அம்மாள்(99) வயது மூப்பு காரணமாக காலமானார். சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடியில் முத்தன் - கருப்பியம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது மகளாக பிறந்தவர் கருப்பாயி. கொல்லங்குடியில் கிராமிய பாடல்களை பாடி அந்த ஊர்களில் பிரபலமாக இருந்தார். தனது ஊர் பெயரே அவரது பெயருடன் சேர்ந்து அடையாளமாக மாறியது. பின்னர் வானொலியில் தன் பணியைத் தொடங்கினார். அங்கு பல ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் இவரது திறமையை அறிந்து நடிகரும், இயக்குனருமான ஆர் பாண்டியராஜன் தான் இயக்கி, நடித்த ‛ஆண்பாவம்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகப்படுத்தினார். அதில் பாண்டியராஜனின் பாட்டியாக நடித்து புகழ் பெற்றார். தொடர்ச்சியாக பாண்டியராஜன் நடித்த படங்களான ‛ஏட்டிக்கு போட்டி, கோபாலா கோபாலா, கபடி கபடி, ஆண்களை நம்பாதே' போன்ற படங்களிலும் நடிக்க வைத்தார். கடைசியாக சசிகுமார் நடித்த காரி படத்தில் நடித்தார். வயது மூப்பால் கலையுலகை விட்டு விலகினார். மறைந்த முன்னார் முதல்வர் ஜெயலலிதா, இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தார். இவரிடம் முதல்வர் ஜெயலலிதா உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது, எங்கள் ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதை ஏற்று உடனடியாக பட்டா வழங்க உத்தரவிட்டார் ஜெயலலிதா. வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த கருப்பாயி இன்று (ஜுன் 14) காலை 8 மணியளவில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு நாளை கொல்லங்குடியில் உள்ள அவரது இல்லம் அருகே நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Bhaskaran
ஜூன் 15, 2025 11:58

இவரைப்பற்றி ஒரு திராவிட இயக்க திரைப்பட பிரமுகர் சொன்னது அரியக்குடி செம்மங்குடி கர்நாடக இசை வல்லுனர்கள் வரிசையில் இந்த கொல்லங்குடி என்று வர்ணித்தார். அவர்கள் கர்நாடக இசை வல்லுனர்கள் கொல்லங்குடி கிராமிய பாடல்கள் பாடுவதில் வல்லுனர் அது வேறு பாதை இது வேறு பாதை ஆனால் ரசிகர்களை இரு சாராரும் மகிழ்வித்தனர்


Raj
ஜூன் 14, 2025 15:37

ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி.


lana
ஜூன் 14, 2025 14:19

நல்ல மனம். தனக்கு என்று கேட்காமல் ஊருக்கு என்று கேட்கும் நல்ல உள்ளங்கள் ஆல் தான் மழை பெய்கிறது. ஓம் சாந்தி


பிரேம்ஜி
ஜூன் 14, 2025 12:18

புகழ்பெற்று நீண்ட நாள் வாழ்ந்து மறைந்திருக்கிறார். நல்ல வாழ்க்கை. ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 14, 2025 12:08

நற்கதி அடையட்டும் .....


Ravi Kumar
ஜூன் 14, 2025 11:03

நல்ல உள்ளம் கொண்ட இந்த ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்ததிக்கிறேன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை