உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வன சீருடை பணியாளர் தேர்வு குழுமம் முடக்கம்: வனத்துறையினர் குற்றச்சாட்டு

வன சீருடை பணியாளர் தேர்வு குழுமம் முடக்கம்: வனத்துறையினர் குற்றச்சாட்டு

வனத்துறையில் பல்வேறு நிலை பணியிடங்களை நிரப்ப துவக்கப்பட்ட, வன சீருடை பணியாளர் தேர்வு குழுமம், தற்போது முடங்கி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகத்தில், அரசின் பல்வேறு துறைகளில் ஏற்படும் காலி பணியிடங்களுக்கு, தேர்வு நடத்தி ஆட்களை தேர்வு செய்ய, அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., உள்ளது. காவல் துறை, தீயணைப்பு துறை பணியாளர் தேர்வுக்கு, சீருடை பணியாளர் தேர்வு வாரியம்; மருத்துவ பணியாளர்கள் தேர்வுக்கு, தனி தேர்வு வாரியமும் உள்ளன.இந்த வரிசையில், முந்தைய அ.தி.மு.க., ஆட்சியின் போது, 2012ல் வனத்துறை பணியாளர்களை தேர்வு செய்ய, வன சீருடை பணியாளர் தேர்வு குழுமம் ஏற்படுத்தப்பட்டது.

ஆன்லைன் முறை

வனத்துறையில் வனவர், வன காப்பாளர், வனக் காவலர் போன்ற பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி, ஆட்களை தேர்வு செய்வதே இதன் பணியாகும். இதன் சார்பில், 2017, 2019ம் ஆண்டுகளில், வனவர், வனக்காப்பாளர் பணியிடங்களுக்கு, 'ஆன்லைன்' முறையில் தேர்வுகள் தடத்தப்பட்டு, வனத்துறையில், 400க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டன. கடந்த 2021ல் தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், வன சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், எந்த தேர்வும் நடத்தப்படவில்லை. இது, வனத்துறையில் சேர ஆர்வமாக உள்ள மாணவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இத்தேர்வு வாரியம் செயல்பாட்டில் உள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வனத்துறையில் ஏற்படும் காலியிடங்களை, குறிப்பிட்ட கால இடைவெளியில் விரைவாக நிரப்ப, தனி தேர்வு குழுமம் ஏற்படுத்தப்பட்டது. இதன் வாயிலாக இரண்டு முறை பணியாளர் தேர்வு நடந்தது. கடந்த 2021க்கு பிறகு, இதன் வழியே புதிய அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், வனக்காப்பாளர் நிலையில் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்பும் பணிகள், அரசு பணியாளர் தேர்வாணையத்திடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.

மூடப்படும் நிலை

வனத்துறையில் தேர்வு குழும நிர்வாகத்துக்காக ஏற்படுத்தப்பட்ட பணியிடங்கள், பெயரளவில் அப்படியே உள்ளன. இதனால், கடந்த ஆட்சியில் துவங்கப்பட்ட வன சீருடை பணியாளர் தேர்வு குழுமம் என்பதால், மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபோன்ற அமைப்புகள் தொடர்ந்து செயல்பட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார -- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி