எறும்பு தின்னிகளை தேடும் வனத்துறை அழியும் இனத்தை பாதுகாக்க முயற்சி
சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், எறும்பு தின்னிகளை தேடும் பணிகளை, வனத் துறை துவக்கி உள்ளது. இந்திய அலங்கு எனப்படும் எறும்பு தின்னிகள், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பரவலாக காணப்பட்ட இனம். மலைப்பகுதிகள், சமவெளிகள், விவசாய நிலங்களை ஒட்டிய பகுதிகளில் எறும்பு தின்னிகள் அதிகம் வாழும். தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை, கிழக்கு தொடர்ச்சி மலைகள், இதை ஒட்டிய மாவட்டங்களில் எறும்பு தின்னிகள் பரவலாக காணப்பட்டன. ஆனால், சமீப காலமாக வனப்பகுதிகளில் எறும்பு தின்னிகள் அரிதாகி உள்ளன. எறும்புகள், பூச்சிகளை உண்ணும் எறும்பு தின்னிகள், உலக அளவில் அதிகம் வேட்டையாடப்படும் விலங்காக உள்ளது. இறைச்சி மற்றும் மருந்து தயாரிப்புக்கு எறும்பு தின்னி களை கடத்தும் கும்பல்கள் நடமாடுகின்றன. குறிப்பாக, இதன் செதில்கள் கடத்தல், விற்பனை விவகாரம், வனத் துறைக்கு சவாலாக அமைந்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கடத்தப்படும் எறும்பு தின்னிகள், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் அதிக விலைக்கு விற்கப் படுவதாக கூறப்படுகிறது. தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில், ஆற்றங்கரை மற்றும் விவசாய நில பகுதிகளில் எறும்பு தின்னிகள் ஓரளவு நடமாடுவதாக, ஆய்வுகள் வாயிலாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், முதல் முறையாக எறும்பு தின்னிகள் பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த, வனத்துறை முன்வந்துள்ளது. இது குறித்து, வனத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதல் முறையாக சிறப்பு முயற்சி அடிப்படையில் எறும்பு தின்னி பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில், எறும்பு தின்னி நடமாட்டம் குறித்த விபரங்கள் சேகரிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இவற்றின் எண்ணிக்கை, வாழிட மேம்பாட்டுக்கான தேவைகள் குறித்த விபரங்களை சேகரித்து வருகிறோம். இதன் அடிப்படையில், அழிவின் விளிம்பில் உள்ள எறும்பு தின்னிகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.