உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐம்பொன் சிலை கடத்தல் வழக்கு நான்கு பேருக்கு சிறை தண்டனை

ஐம்பொன் சிலை கடத்தல் வழக்கு நான்கு பேருக்கு சிறை தண்டனை

சென்னை: கடலுாரில் பழமையான, மூன்று ஐம்பொன் சிலைகளை கடத்தி, விற்பனை செய்ய முயன்ற வழக்கில், 13 ஆண்டுகளுக்கு பின், குற்றவாளிகள் நான்கு பேருக்கு, தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த வல்லம் கிராமம், ஏரிக்கரையில், திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் கதவை உடைத்து, 2014ல், மூன்று ஐம்பொன் உலோகச் சிலைகள், பீடத்துடன் திருடப்பட்டன; இந்த சிலைகள் மிகவும் பழமையானவை. இது குறித்து, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கடலுார் மாவட்டம், பண்ருட்டி தாலுகாவை சேர்ந்த ஆறுமுகம், 31, சிவா என்கிற கண்ணாடி, 27, செல்வம், 35, ஆகியோர் கூட்டு சேர்ந்து, சிலையை திருடி, செந்தில், 45 என்பவரிடம் ஒப்படைத்ததும், அவர் சிலைகளை சென்னையில் விற்பனை செய்ய முயன்றதும் தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்து, சிலைகளை மீட்டனர். இந்த வழக்கு, எழும்பூர் தலைமைப் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், கடந்த 13 ஆண்டுகளாக நடந்து வந்தது. நேற்று முன்தினம் வழக்கை விசாரித்த, முதன்மை நீதிபதி ஆர்.கிரிஜாராணி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரையும், குற்றவாளிகள் என அறிவித்து, அவர்களுக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை, தலா, 1,500 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !