மாற்றுத்திறனாளிகள் இலவச பஸ் பாஸ் டிசம்பர் வரை செல்லும்
சென்னை:'மாற்றுத்திறனாளிகள், தமிழறிஞர்களுக்கான இலவச பஸ் பாஸ்களை, டிச., 31ம் தேதி வரை பயன்படுத்தலாம்' என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில், மாற்றுத்திறனாளிகள், கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், அறிவுசார் திறன் குறைபாடு உள்ளவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு, இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இதை இணையதளம் வாயிலாக பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல் கட்டமாக, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 2023 செப்., 7ம் தேதி அமல்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, மாநிலம் முழுதும் உள்ள பயனாளிகளுக்கு திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான மென்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட பணிகள், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வழியாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதை முழுமையாக செயல்படுத்த அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, பயனாளிகள் ஏற்கனவே பயன்படுத்தி வரும், அக்., 31ம் தேதி வரை செல்லத்தக்க இலவச பஸ் பாஸை, டிச., 31ம் தேதி வரை பயன்படுத்தி பயணம் செய்யலாம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.