ராமேஸ்வரம் -- காசிக்கு ரயிலில் இலவச ஆன்மிக பயணம்: ஹிந்து அறநிலையத்துறை திட்டம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சிவகங்கை: ''தமிழக அளவில் 600 பக்தர்களை ராமேஸ்வரத்தில் இருந்து ரயிலில் காசிக்கு இலவசமாக ஆன்மிக பயணம் அழைத்து செல்ல ஹிந்து அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது.இத்துறை சார்பில் (2025- -2026) ஆண்டிற்கு ராமேஸ்வரத்தில் இருந்து ரயிலில் 10 நாட்கள் ஆன்மிக சுற்றுப்பயணமாக காசிக்கு அழைத்து செல்ல உள்ளனர். இதற்கான விண்ணப்பத்தை அந்தந்த மண்டல ஹிந்து அறநிலைய இணை கமிஷனர் அலுவலகத்திலோ அல்லது www.hrce.tn.gov.inஇணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அந்த அலுவலகத்தில் அக்.,22 க்குள் ஒப்படைக்க வேண்டும். வயது 60 முதல் 70 க்கு உட்பட்ட ஹிந்து மதத்தை சார்ந்தவராக இருத்தல்வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சம். வருமானம், மருத்துவம், வயது சான்றுகள் சமர்ப்பித்து ஆதார், பான் கார்டு, அலைபேசி எண், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 3 வழங்க வேண்டும். இதுவரை அரசின் இலவச ஆன்மிக சுற்றுப்பயணம் செல்லாதவராக இருத்தல் வேண்டும்.ஹிந்து சமய அறநிலைய அதிகாரி கூறியதாவது:ஒவ்வொரு இணை கமிஷனரின் கீழ் 30 பேர் வீதம் 20 இணை கமிஷனர் அலுவலகங்கள் மூலம் 600 பேர்வரை ரயிலில் ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் அழைத்து செல்ல உள்ளோம். இதற்கான தேதி தேர்வான விண்ணப்பதாரரிடம் தெரிவிப்போம். ராமேஸ்வரத்தில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து புறப்பட்டு, காசிக்கு சென்று அங்கு தரிசனம் செய்து, மீண்டும் ராமேஸ்வரத்தில் இறக்கிவிடப்படுவர் என்றார்.