உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு; ஆக்கிரமிப்புகள் அகற்ற தமிழக அரசு கெடு விதிப்பு

தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு; ஆக்கிரமிப்புகள் அகற்ற தமிழக அரசு கெடு விதிப்பு

சென்னை : தேசிய நெடுஞ்சாலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை, டிசம்பர் இறுதிக்குள் முடிக்க, தமிழக அரசு கெடு விதித்துள்ளது.தமிழகத்தில் 6,600 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு, அண்டை மாநிலங்களுடன் இணைக்கப்பட்டு உள்ளன. இச்சாலை வழியாக, தினமும் ஏராளமான சரக்கு வாகனங்கள், பயணியர் வாகனங்கள் செல்கின்றன. மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில், தேசிய நெடுஞ்சாலைகள் முக்கிய பங்காற்றுகின்றன.இச்சாலையில் பயணிக்கும், வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க, 65 இடங்களில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், பல தேசிய நெடுஞ்சாலைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை. பராமரிப்பு மற்றும் விரிவாக்கம் செய்யப்படாத சாலைகளில், விபத்துகள் அதிகரித்து வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளில், அதிக விபத்துகள் நடக்கும் மாநிலங்களில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலை போட, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தயாராக இருந்தும், 13 ஆண்டுகளாக, அப்பணிக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. இதனால், சாலை மேம்பாட்டு பணிகளை முடிக்க இயலவில்லை என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்நிலையில், சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற, முழு ஒத்துழைப்பு வழங்க, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக, மாவட்ட கலெக்டர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.அதேநேரத்தில், 'ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளை, டிசம்பர் மாத இறுதிக்குள் முடித்து கொள்ள வேண்டும்' என, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு தமிழக அரசு கெடு விதித்துள்ளது. இதையடுத்து சென்னை-கோல்கட்டா, சென்னை-பெங்களூரு, சென்னை-திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரதான தேசிய நெடுஞ்சாலைகளில், ஆக்கிரமிப்புகளை அகற்ற, ஆணையம் தயாராகி வருகிறது. சில சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம், விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ