கால்நடை பண்ணைகளை தரம் உயர்த்த நிதி ஒதுக்கீடு
சென்னை:கால்நடை பண்ணைகளில், சேதமடைந்த கொட்டகைகளை சீரமைத்து, தரம் உயர்த்தவும், புதிய கால்நடைகளை கொள்முதல் செய்யவும், 7.87 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இது குறித்து கால்நடைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:கால்நடைத் துறையின் கீழ், 13 பண்ணைகள் செயல்படுகின்றன. இப்பண்ணைகளில், பல கால்நடை கொட்டகைகள், 15 முதல் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. அவற்றில் பெரும்பாலானவை சேதமடைந்துள்ளன. அவற்றை கால்நடைகள் தங்கும் வகையில் மேம்படுத்த 2.96 கோடி ரூபாய்; கால்நடை இருப்பை அதிகரிக்க, புதிய கால்நடைகளை கொள்முதல் செய்ய, 4.81 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்நிதியில், திருநெல்வேலி மாவட்டம், அபிஷேகப்பட்டி கால்நடை பண்ணைக்கு, 59 லட்சம்; சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு, 57 லட்சம்; தஞ்சாவூர் மாவட்டம் நடுவூர் 46.5 லட்சம்; திருவாரூர் மாவட்டம், கொருக்கை பண்ணைக்கு 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்துார் ஆட்டுப் பண்ணைக்கு, 33 லட்சம்; வேலுார் மாவட்டம், முகுந்தராயபுரம் ஆட்டுப்பண்ணைக்கு, 46 லட்சம்; செங்கல்பட்டு மாவட்டம், காட்டுப்பாக்கம் கோழிப்பண்ணைக்கு, 23 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.