உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வில்லா, அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானத்தில் ஜி ஸ்கொயர்

வில்லா, அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானத்தில் ஜி ஸ்கொயர்

சென்னை:தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வீட்டு மனை திட்டங்களை செயல்படுத்தி வரும், 'ஜி ஸ்கொயர்' நிறுவனம், வில்லா மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதில் இறங்க உள்ளது. அதன் தலைமை செயல் அலுவலர் ஜுனாய்த் பாபு, விற்பனை பிரிவு தலைவர் சிவகுமார் பெத்தையன் ஆகியோர் அளித்த பேட்டி:தமிழகத்தில் 2012ல் 'ஜி ஸ்கொயர்' நிறுவனம் துவக்கப்பட்டது. கடந்த 2019 வரை, பெரிய நிறுவனங்களுக்கு தேவையான நிலங்களை, ஏற்பாடு செய்து தரும் பணிகளில் ஈடுபட்டது. கொரோனா மற்றும் ஊரடங்கு காலத்துக்கு பிறகு, பெரிய நிறுவனங்கள் தரப்பில், நிலம் தேடுவதில் சிறிது தொய்வு ஏற்பட்டது. அப்போது நிலங்களை மனைகளாக பிரித்து, மக்களுக்கு விற்கும் திட்டங்களில் இறங்கினோம். இதனால், 2021 முதல் தற்போது வரை, 127 இடங்களில் மனைப்பிரிவு திட்டங்களை செயல்படுத்தி, 15,000 குடும்பங்களுக்கு மனைகள் விற்பனை செய்து இருக்கிறோம். தற்போது வரை, 4,000 ஏக்கர் நிலங்களை பரிவர்த்தனை செய்து இருக்கிறோம்.

வீடு கட்ட முழு உதவி

சென்னை போன்ற நகரங்களுக்குள், மனைகள் விற்பனை செய்ய முடியும் என்பதை நிரூபித்ததால், நாங்கள் முன்னணியில் இருக்கிறோம். இது வரை நிலம் தொடர்பாக, எந்த பிரச்னையும் எழுந்தது இல்லை. எங்களிடம் மனை வாங்கியோர், வீடு கட்ட முழுமையாக உதவும் வரையில், 'பில்ட் அசிஸ்ட்' என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். அடுத்து வில்லா, அடுக்குமாடி குடியிருப்புகளை, நாங்களே கட்டி விற்பனை செய்ய உள்ளோம்.

ரூ.6,000 கோடி மதிப்பீடு

முதல் கட்டமாக, வண்டலுாரில் 2 ஏக்கர் நிலத்தில், தலா, 1000 சதுர அடி மனையில் 18 வில்லா வகை வீடுகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதே போல், ஒரு ஏக்கர் நிலத்தில் 112 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம். இது தொடர்பான திட்டங்களில், 1,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்படும். ஆண்டு வர்த்தகம், 6,000 கோடி ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் பல்வேறு நகரங்களில், குறைந்த விலையில் மக்களுக்கு, வில்லா மற்றும் அடுக்குமாடி வீடுகள் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. மூத்த குடி மக்களுக்கான வீடுகள், வணிக ரீதியான கட்டுமான திட்டங்களை, எதிர்காலத்தில் செயல்படுத்த இருக்கிறோம். கடந்த 2019 வரை பெரிய நிறுவனங்களுக்கு நிலங்களை வாங்கி கொடுத்த்த போது, எங்கள் மீது யாரும் அரசியல் சாயம் பூசவில்லை. ஆனால், 2021க்கு பின், மனை விற்பனையில் இறங்கிய நிலையில், தொழில் ரீதியாக எங்கள் மீது குறை சொல்ல முடியாதவர்கள், அரசியல் சாயம் பூசுகின்றனர். எந்த அரசியல் கட்சியுடனும் எங்களுக்கு தொடர்பு இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ