கங்கைகொண்ட சோழபுரம் புறவழிச்சாலை நீண்ட இழுபறிக்கு பின் பணி துவக்கம்
சென்னை:கங்கைகொண்ட சோழபுரம் புறவழிச்சாலை பணிகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துவங்கியுள்ளது.திருச்சி - சிதம்பரம் இடையே, 134 கி.மீ.,க்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதை மேம்படுத்தும் பணிகள், திருச்சி - கல்லகம், கல்லகம் - மீன்சுருட்டி, மீன்சுருட்டி - சிதம்பரம் என, மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரியலுார் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில், ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ள இந்த கோவிலை ஒட்டி, திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. சாலை பணிகள் முடிவுற்றால் கனரக வாகனங்கள், அதிகளவில் இச்சாலையில் பயணிக்கும். இதனால், கோவிலுக்கு பாதிப்பு ஏற்படும்.எனவே, திருச்சியில் இருந்து சிதம்பரம் செல்லும் கனரக வாகனங்கள் வசதிக்காக, கங்கைகொண்ட சோழபுரத்திற்கு செல்லாத வகையில், மாற்றுச் சாலை அமைக்க வேண்டும் என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், 2023ல், மாநில நெடுஞ்சாலைத் துறையால் வலியுறுத்தப்பட்டது.அதன்பின், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கும், தமிழக நெடுஞ்சாலை துறையால் பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வெளியே, 7.20 கி.மீ.,க்கு புறவழிச்சாலை அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்தது. இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகால இழுபறிக்கு பின், இப்பணிக்கு தற்போது, 105 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சாலை அமைப்பதற்கான முதற் கட்டப் பணிகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துவங்கியுள்ளது.தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:கங்கைகொண்ட சோழபுரம் புறவழிச்சாலை பணிக்கான ஒப்பந்ததாரர் தேர்வு, ஜூலை 17ல் நடக்க உள்ளது. இதை தொடர்ந்து, நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடக்கும். சாலை அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள நிலத்தில் கட்டடங்கள், குடியிருப்பு பகுதிகள் எதுவும் இல்லை. அரியலுார் மாவட்டத்தில், 83.9 ஏக்கர் பட்டா நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இப்பணி, ஆகஸ்ட் மாதம் துவங்கும். நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்தவுடன், சாலை அமைப்பதற்கான பணிகள் துவங்கும்; 18 மாதங்களில் முடிக்கப்படும்.இவ்வாறு கூறினார்.