அன்புமணி நீக்கத்திற்கு பொதுக்குழுவில் ஒப்புதல்?
அன்புமணியை, கட்சியில் இருந்து நீக்கிய முடிவுக்கு, பா.ம.க., பொதுக்குழு ஒப்புதல் பெற ராமதாஸ் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக, அவரது ஆதரவாளர்கள் கூறியதாவது:
பா.ம.க., விதிகளின்படி, பொதுக்குழு உறுப்பினர்கள்தான் தலைவரை தேர்வு செய்ய முடியும். கடந்த, 2022 மே 28ல், தலைவராக அன்புமணி தேர்வு செய்யப்பட்டார். தற்போது, எழுந்துள்ள பிரச்னையால், அன்புமணியை தலைவர் பதவியில் இருந்தும், கட்சி உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் ராமதாஸ் நீக்கி விட்டார். ஆகஸ்ட் 19ல் நடந்த பொதுக்குழுவில், தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கியதற்கு ஒப்புதல் பெறவில்லை. எனவே, மீண்டும் பொதுக்குழுவை கூட்டி, கட்சியிலிருந்து அன்புமணியை நீக்கியதற்கு ஒப்புதல் பெறும் தீர்மானத்தை நிறைவேற்ற, ராமதாஸ் முடிவு செய்துள்ளார். இதற்காக, அக்டோபர் முதல் வாரத்தில், பொதுக்குழு கூடும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.