மதுரை மரிக்கொழுந்து, விளாச்சேரி களிமண் பொம்மைகளுக்கு புவிசார் குறியீடு
திருநெல்வேலி:மதுரை மரிக்கொழுந்து, விளாச்சேரி களிமண் பொம்மைகளுக்கு மத்திய அரசின் தொழில்துறை மற்றும் உற்பத்தி மேம்பாட்டு துறை புவிசார் குறியீடு ஜி.ஐ. வழங்கியுள்ளது.மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வளரக்கூடிய மரிக்கொழுந்து, மதுரையின் இறைவழிபாட்டில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. 16ம் நுாற்றாண்டில் நடந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருக்கல்யாண விழாவில் மரிக்கொழுந்து பயன்படுத்தப்பட்டதற்கான பதிவுகள் உள்ளன. மதுரையின் தனித்துவமான பண்பாட்டு அடையாளமாக விளங்குவதால், மரிக்கொழுந்துக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.அதேபோல், மதுரை அருகே விளாச்சேரியில் தொழிலாளர்கள் தயாரிக்கும் களிமண் பொம்மைகள், அப்பகுதியில் கிடைக்கும் இயற்கை மண்ணின் தனித்துவத்தால் பிரபலமானவை. விளாச்சேரி கீழக்குயில்குடி கருப்பசாமி கோயிலின் மூலவர் சிலை நுாறு ஆண்டுகளுக்கு முன் களிமண்ணால் உருவாக்கப்பட்டது என்பது இதன் வரலாற்றுச் சிறப்பை விளக்குகிறது. இந்தப் பொம்மைகள், தெய்வ வழிபாட்டு சிற்பங்கள் என்ற வகையில் ஏற்றுமதியிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.இந்த புவிசார் குறியீடு பெறுவதற்காக 2021ல் நபார்டு மதுரை அக்ரி பிசினஸ் இன்குபடேசன் சென்டர் விண்ணப்பித்தது. புவிசார் குறியீடு பதிவிற்கான சட்ட வல்லுநர் ப.சஞ்சய் காந்தி சட்டப்பூர்வ பணிகளை மேற்கொண்டார். இவர் இதுவரை திண்டுக்கல் பூட்டு, கோவில்பட்டி கடலைமிட்டாய், ஸ்ரீவில்லிபுத்துார் பால்கோவா என 45க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்க பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். தற்போது மேலும் 75 மண் சார்ந்த பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.நபார்டு மதுரை அக்ரி பிசினஸ் இன்குபடேசன் சென்டர் முதன்மை அதிகாரி கணேஷமூர்த்தி கூறுகையில், எங்கள் மையத்தின் மூலம் ஏற்கனவே சோழவந்தான் வெற்றிலை, ஏரல் வெற்றிலை உள்ளிட்ட நான்கு பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுள்ளோம்.தற்போது மதுரை மரிக்கொழுந்து, விளாச்சேரி களிமண் பொம்மைகளுக்கு கிடைத்துள்ள புவிசார் குறியீடு அதன் தரத்தையும், அவற்றின் சிறப்பையும் உலகளவில் உயர்த்துவதாக அமையும் என்றார்.