விசாரணைக்கு ஆஜரான சிறுமி ஐகோர்ட்டில் தற்கொலை முயற்சி
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆட்கொணர்வு மனு மீதான விசாரணைக்கு நேரில் ஆஜராகி இருந்த 14 வயது சிறுமி, முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை நீலாங்கரை போலீசில், கடந்த ஜன., 31ல், தன் 14 வயது மகள் காணாமல் போனதாக, அவரது தந்தை புகார் அளித்து இருந்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், தன் மகளை கண்டுபிடித்து ஆஜர்படுத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், சிறுமியின் தந்தை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்ட சிறுமியிடம், நீதிபதிகள் பேசினர். பின்னர், 'அந்தமானில் உள்ள தன் தாயுடன் சேர்ந்து வசிக்கவே சிறுமி விரும்புகிறார். ஆனால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை பார்த்தபோது, அந்தமானில் சிறுமி பாதுகாப்பாக வசிக்க உகந்த சூழல் இருக்காது என தெரிகிறது. எனவே, சென்னை கெல்லிஸில் உள்ள அரசு பெண்கள் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமியை சேர்க்க வேண்டும்' என, நீலாங்கரை போலீசாருக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை அடுத்து வெளியே வந்த சிறுமி, திடீரென முதல் தளத்தில் இருந்து குதித்து, தற்கொலைக்கு முயற்சித்தார்; அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினார். அவரை மீட்ட ஊழியர்கள், ஆம்புலன்சில் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவ இடத்தை, மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும், தமிழக போலீசாரும் ஆய்வு செய்தனர். காப்பகத்தில் ஒப்படைக்க பிறப்பித்த உத்தரவை கேட்டு மனமுடைந்த சிறுமி, தற்கொலைக்கு முயற்சித்ததாக, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.