உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் கோவா திரைப்பட விழா

இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் கோவா திரைப்பட விழா

சர்வதேச திரைப்பட விழாவின், 'பிலிம் பஜார்' இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிப்பதாக தமிழக படைப்பாளர்கள் கூறினர். கோவாவின் தலைநகர் பணஜியில், கடந்த 20 முதல், 28ம் தேதி வரை, இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இதில், 43 இந்திய மொழி திரைப்படங்கள் உட்பட, 81 நாடுகளில் இருந்து, 180 சர்வதேச படங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. அவற்றில், குறும்படங்கள், செய்திப்படங்கள் உள்ளிட்டவையும் அடங்கும்.

முன்பதிவு

தமிழில் கார்த்திக் சுப்புராஜின், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமும் திரையிடப்படுகிறது. கோவாவில் பல்வேறு இடங்களில் உள்ள திரையரங்குகளில், இந்த திரைப்படங்கள் தொடர்ந்து திரையிடப்படுகின்றன. இவற்றைக் காண, இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கான மொபைல் போன் செயலி வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும். திரைப்பட நடிகர், நடிகையர், இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்டோர், அடுத்தடுத்து கலந்துரையாடலில் பங்கேற்பதால், சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ரசிகர்கள், இதற்காக கோவாவில் குவிந்துள்ளனர்.அந்த வகையில், நேற்று முன்தினம் தமிழகத்தைச் சேர்ந்த இயக்குனர் மணிரத்தினத்துடன், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனும், நேற்று நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடிகை குஷ்புவும் கலந்துரையாடினர். மணிரத்தினம் தன் உரையாடலில் கூறியதாவது:இலக்கியத்தையும், புராணத்தையும் படமாக எடுக்கும்போது, பல்வேறு சவால்கள் ஏற்படுகின்றன. எழுத்தாளர் கல்கி எழுதிய சோழர்களின் கதையான, 'பொன்னியின் செல்வன்' நாவலை படமாக்கிய போது, சோழர்கால கட்டடக் கலையுடன் கூடிய அரண்மனை தஞ்சை பகுதியில் இல்லாததால், 'செட்' அமைத்து படமெடுக்க விரும்பாமல், வட மாநிலங்களில் உள்ள அரண்மனைகளில் படப்பிடிப்பு நடத்தி, கதைக்கேற்ப மெருகேற்றினேன். அப்படிப்பட்ட கதைகளை படமாக்கும்போது, கதையை பாத்திரத்துக்குள் கச்சிதமாக பொருத்த வேண்டிய வேலையை தான் செய்கிறேன். இன்றும், இளைஞர்களிடம் இருந்து புதிய விஷயங்களை கற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். சிவகார்த்திகேயன் பேசியதாவது:எனக்கு சிறு வயதில் இருந்தே நடிக்கும் ஆசை இருந்தது. இன்ஜினியரிங் கல்லுாரியில் படித்த போது, என் பேராசிரியர்களை போல பல குரலில் பேசினேன். அது நண்பர்களிடம் கைத்தட்டல் பெற்றது. பேராசிரியர்களுக்கு தெரிந்த போது, மன்னிப்பு கோரினேன். 'இந்த திறமையை நல்ல விதமாக பயன்படுத்து' என்று ஊக்குவித்தனர். தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். பின், நிகழ்ச்சி தொகுப்பாளரான போது, நகைச்சுவையை கையில் எடுத்தேன். நடிகரான போதும், அதை விடவில்லை. துவக்கத்தில் கிடைத்த படங்களில் நடித்தேன். தற்போது, எனக்கான கதைகளுடன் என்னிடம் வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

'பிலிம் பஜார்'

கோவாவில் உள்ள மேரியாட் ஹோட்டலில், 'பிலிம் பஜார்' என்ற தலைப்பில், திரைப்படம் சார்ந்த அனைத்து விஷயங்களுக்குமான சந்தை உள்ளது. இதில், கதை, திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு, தயாரிப்பு உள்ளிட்டவற்றில் பிரபலமானவர்கள், தங்களின் திறமை பற்றிய குறிப்புகளுடன் அணுகுகின்றனர். சர்வதேச அளவில் உள்ள இந்த சந்தையில், இந்தியாவின் சார்பில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த திரைப்பட நிறுவனங்கள், படப்பிடிப்பு தளங்கள், அரசு செய்யும் உதவிகள் உள்ளிட்ட விபரங்களை கூற, அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல, நெட்பிளிக்ஸ், அமேசான், கூகுள் உள்ளிட்ட தனியார் ஓ.டி.டி., தளங்களும் அரங்குகள் அமைத்துள்ளன. இணையதளத்தில் படங்களை வியாபாரம் செய்வதற்கான வணிக நிறுவனங்களும் உள்ளன.இது, திரைத்துறையைச் சேர்ந்தோருக்கு பெரும் வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.

வாய்ப்பு

இந்த விழாவில், 'கிரியேட்டிவ் மைண்ட்ஸ் ஆப் டுமாரோ' அதாவது, சி.எம்.ஓ.டி., என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், நாளைய படைப்பாளர்களை அடையாளம் காட்டும் வகையில், சிறந்த நுாறு கலைஞர்களை தேர்வு செய்து, 48 மணி நேரத்துக்குள் ஒரு படத்தை எடுக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதில், பல்வேறு பிரிவுகளில், தமிழகத்தைச் சேர்ந்த ஏழு இளைஞர்கள் தேர்வாகி உள்ளனர். அதாவது, சேலம் விக்னேஷ் வடிவேலு, திருத்தணி பிரவீன்குமார் நாகேந்திரன் ஆகியோர் இயக்கம் சார்ந்த பிரிவிலும், சென்னை சஞ்சய் மற்றும் சித்தார்த் ஆகியோர் இசைப் பிரிவிலும் தேர்வாகி உள்ளனர். கன ரமேஷ் கதைப் பிரிவிலும், ஸ்ரீராம் வி.எப்.எக்ஸ்., என்ற தொழில்நுட்பப் பிரிவிலும், சத்தியநாதன் நடிப்பிலும் தேர்வாகி உள்ளனர். அவர்கள் கூறியதாவது:எங்களை போன்ற திரைத்துறை சார்ந்த கனவுகளுடன் வளரும் இளைஞர்களுக்கு இந்த, சி.எம்.ஓ.டி., எனும் தளம் வரப்பிரசாதமாக உள்ளது. இதில் எங்களை போன்ற பலரின் படைப்புகளை ஆராய்ந்து, நுாறு பேருக்கு வாய்ப்பு தரப்படுகிறது. இதில், நிறம், மொழி, பாலினம் சாராமல், அனைவரும் இந்தியர் என்ற உணர்வுடன் ஒருங்கிணைந்து, இரவு பகலாக இரண்டு நாட்களில் ஒரு படைப்பை உருவாக்குவதை நினைக்கும்போது பிரமிப்பாக உள்ளது. இது, திறமைக்கான பாலமாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தபால் தலை வெளியீடு

இந்திய சினிமாவின் பெரும் ஆளுமைகளாக விளங்கிய ராஜ்கபூர், தபன் சின்ஹா, அக்கினேனி நாகேஸ்வரராவ், முகமது ரபி ஆகியோரின் நுாறாவது பிறந்த ஆண்டை சிறப்பிக்கும் வகையில், அவர்களுக்கு நினைவு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், கோவாவின் மிராமர் கடற்கரையில், பிரபல மணல்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், அவர்களின் உருவங்களை மணல் சிற்பமாக வடிவமைத்து, நினைவு கூர்ந்துள்ளார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை