மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டியது தங்கம் விலை
சென்னை : தமிழகத்தில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 1,360 ரூபாய் அதிகரித்து, 1 லட்சத்து, 560 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தங்கம், வெள்ளி மீது, சர்வதேச முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். இதனால், நம் நாட்டில் அவற்றின் விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், இம்மாதம், 15ம் தேதி, 22 காரட் ஆபரண தங்கம் சவரன், 1 லட்சத்து, 120 ரூபாய்க்கு விற்பனையானது. இதுவே, தங்கம் விற்பனையில் உச்ச விலையாக இருந்தது. பின், விலை சற்று குறைந்தது. கடந்த சனிக்கிழமை தங்கம் கிராம், 12,400 ரூபாய்க்கும், சவரன், 99,200 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 226 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை தங்கச் சந்தைக்கு விடுமுறை. அன்று முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின. நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு, 80 ரூபாய் உயர்ந்து, 12,480 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 640 ரூபாய் அதிகரித்து, 99,840 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, ஐந்து ரூபாய் உயர்ந்து, 231 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று மாலையில், மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு, 90 ரூபாய் உயர்ந்து, 12,570 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 720 ரூபாய் அதிகரித்து, 1,00,560 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு, 1,360 ரூபாய் அதிகரித்தது.