ரூ.90,000ஐ நெருங்கியது தங்கம் விலை
சென்னை:தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், ஆபரண தங்கம் சவரன் விலை, 90,000 ரூபாயை நெருங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு கொள்கையால், பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், சர்வதேச முதலீட்டாளர்கள், பாதுகாப்பு கருதி தங்கத்தில் அதிக முதலீடு செய்கின்றனர். சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளதால், நம் நாட்டிலும் அதன் விலை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 11,125 ரூபாய்க்கும், சவரன், 89,000 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 167 ரூபாய்க்கு விற்கப் பட்டது. இதுவே தங்கம், வெள்ளி விற்பனையில் உச்ச விலையாகும். நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 75 ரூபாய் உயர்ந்து, 11,200 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 600 ரூபாய் அதிகரித்து, 89,600 ரூபாய்க்கு விற்கப் பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.