நல்லகண்ணு டிஸ்சார்ஜ்
சென்னை:இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு, 100, ஒன்றரை மாத சிகிச்சைக்கு பின், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இவர் கடந்த ஆக., 22ல் வீட்டில் தவறி விழுந்ததால், தலை, கைவிரல்களில் காயம் ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின், 24ம் தேதி மாலை, உணவு அருந்தும்போது, புரை ஏறியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. ராஜிவ்காந்தி அரசு மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார். அவ்வப்போது சிகிச்சையில் முன்னேற்றம் மற்றும் பின்னடைவு இருந்தது. இதனால், செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்றார். இந்நிலையில், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், நேற்று வீடு திரும்பினார். மருத்துவமனை முதல்வர் சாந்தாராம் கூறுகையில், ''நல்லகண்ணு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. செயற்கை சுவாசம் போன்ற மருத்துவ உதவிகள் அவருக்கு தேவைப்படவில்லை. வயது மூப்பு காரணமான சிகிச்சை மற்றும் கண்காணிப்பு தொடர்ந்து தேவைப்படுகிறது. வீட்டில் இருந்தபடியே, அச்சிகிச்சைகளை பெற முடியும்,'' என்றார்.