சென்னை : அரசு, 'கேபிள் டிவி' ஆகஸ்ட் மாத இறுதியில் துவங்குவதற்கான பணிகள் தீவிரமாக்கப் பட்டுள்ளன.இது குறித்து அரசு, 'கேபிள் டிவி' பணியில் உள்ள பெயர் வெளியிட விரும்பாத உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: அரசு, 'கேபிள் டிவி'யை செயல்படுத்த தனியார், 'கேபிள் டிவி' ஆபரேட்டர்களுக்கு, இ - டெண்டர் கடந்த 15ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த இ - டெண்டரில், கேபிள் மையத்தை நிறுவுதல், ஒளிபரப்பு செய்வதற்கான இயந்திரங்கள் வாங்குதல், வீடுகளுக்கு இணைப்பு கொடுத்தல், கேபிள் இணைப்பு கொடுப்பதற்கான ஒயர்களின் தரம், தரை வழியாக ஒயர்களை கேபிள் மையத்தில் இணைப்பதற்கான செலவுகள் உள்ளிட்ட பல்வேறு விதிகள் தரப்பட்டுள்ளன. டெண்டர், வரும் 29ம் தேதியுடன் முடிவதால், தனியார், 'கேபிள் டிவி' ஆபரேட்டர்கள் மிகுந்த முனைப்புடன் விண்ணப்பித்து வருகின்றனர்.
கடந்த அரசு கோவை, தஞ்சாவூர், வேலூர், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு, 'கேபிள் டிவி' தொடங்க மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதைப் பராமரித்து, அரசு கேபிளை நடத்துவதற்கும், பல்வேறு இடங்களில் அரசு கேபிளை துவங்கவும், இ - டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள், அரசு, 'கேபிள் டிவியை' கொண்டு வர, பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இ - டெண்டர் விண்ணப்பங்கள் திறக்கும் போது இதற்கான முழுத் தகவல்கள் தெரிய வரும். அதிகமான சேனல்கள் அரசு, 'கேபிள் டிவி'யில் தெரிவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.