உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 14 லட்சம் அங்கன்வாடிகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை : மத்திய அமைச்சர் தகவல்

14 லட்சம் அங்கன்வாடிகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை : மத்திய அமைச்சர் தகவல்

குன்னூர் : ''14 லட்சம் அங்கன்வாடிகளை மேம்படுத்த, மத்திய அரசு தயாராக உள்ளது. அங்கன்வாடியில் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த, முயற்சி எடுக்க வேண்டும்,'' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை இணையமைச்சர் (தனி பொறுப்பு) கிருஷ்ணா தீரத், நேற்று காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரயில் மூலம் காலை 9.50 மணிக்கு குன்னூர் வந்தார்.

இதன் பின், குன்னூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அங்கன்வாடியை அமைச்சர் ஆய்வு செய்தார். குழந்தைகளிடம் நலம் விசாரித்த அமைச்சர், அவர்களுக்கு வழங்கப்படும் சத்து மாவு உருண்டையை ஆய்வு செய்து, குழந்தைகளுக்கு ஊட்டினார். சில குழந்தைகளின் எடையை சோதித்து அறிந்தார். 'அங்கன்வாடியில் 15 குழந்தைகள் மட்டுமே உள்ளனர்' என்ற தகவலை கேட்டதும், வருத்தப்பட்ட அவர், குழந்தைகள் எண்ணிக்கை குறைய காரணம் கேட்டார்.

'சுற்றியுள்ள மக்களில் பலர் வியாபாரிகள்; பொருளாதாரத்தில் நல்ல நிலைமையில் உள்ளவர்கள்; அவர்கள் ஆங்கில மொழி போதிக்கும் தனியார் மழலையர் பள்ளி, விளையாட்டுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்து விடுகின்றனர். ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் மட்டும் தான் இங்கு படிக்கின்றனர்' என, அங்கன்வாடி பணியாளர்கள் விளக்கமளித்தனர்.

''குழந்தைகளின் பெற்றோர் விரும்பும் வகையில், தனியார் விளையாட்டுப் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கில மொழி போதனையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்,'' என, மாவட்ட கலெக்டரிடம், அமைச்சர் யோசனை கூறினார். பின், டி.டி.கே., சாலையில் உள்ள அங்கன்வாடியை பார்வையிட்டார்.

''இந்தியாவில் 14 லட்சம் அங்கன்வாடிகள் உள்ளன; அவற்றை மேம்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளது. அங்கன்வாடியில் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த முயற்சி எடுக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்