உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கால் டாக்சி விதிமுறைகள்: 5 ஆண்டுகளாக அரசு தாமதம்

கால் டாக்சி விதிமுறைகள்: 5 ஆண்டுகளாக அரசு தாமதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் கால் டாக்சிகளுக்கான விதிமுறைகளை வெளியிடுவதில், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழக அரசு தாமதம் செய்து வருகிறது.சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட பெரிய நகரங்களில், 'கால் டாக்சி' எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் முதல் முறையாக, 2001ல் கால் டாக்சி சேவை துவங்கியது. ஆரம்பத்தில் சில ஆயிரம் கார்களே இயங்கின. தற்போது, தமிழகம் முழுதும், 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட கால் டாக்சிகள் இயக்கப்பட்டு வருகின்றன. மொபைல் போன் செயலிகள் வாயிலாக, முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால், பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. கார்களின் வகைகளுக்கு ஏற்றார் போல, 10 கி.மீ., துாரத்திற்கு குறைந்தபட்சமாக, 250 முதல் அதிகபட்சமாக, 350 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், கால் டாக்சிகளுக்கு கட்டணம் நிர்ணயம் தொடர்பாக, எந்த விதிமுறையும் அரசால் வகுக்கப்படவில்லை.இதுகுறித்து, சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்க பொதுச்செயலர் ஜூட் மேத்யூ கூறியதாவது: சென்னை போன்ற பெரு நகரங்களில், பொதுமக்கள் பயணம் செய்ய, கால் டாக்சிகள் வசதியாக இருக்கின்றன. ஆனால், தமிழகத்தில் கால் டாக்சிகள் இயக்கத்திற்கு என விதிமுறைகள் அறிவிக்கப்படவில்லை. பெரிய நிறுவனங்கள் சார்பில் இயக்கப்படும் வாடகை வாகனங்களுக்கான, 'கமிஷன்' தொகை அடிக்கடி மாற்றப்படுகிறது. எனவே, கால் டாக்சிகளுக்கு சிறப்பு உரிமம் வழங்கி, 'டிஜிட்டல் மீட்டர்' பொருத்தி இயக்கினால், ஏராளமான மக்கள் நியாயமான கட்டணத்தில் பயணம் செய்ய முடியும். இந்த தொழிலை நம்பியுள்ள வாகன ஓட்டுனர்களின் வாழ்வாதாரமும் பாதுகாப்பாக இருக்கும். கடந்த 2019 முதல், இதையெல்லாம் அரசு பரிசீலனை நிலையிலேயே வைத்திருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கால் டாக்சிகளுக்கு கட்டணம் நிர்ணயம், 'சிசிடிவி கேமரா' மற்றும், ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்துவது, தனியாக கட்டுப்பாட்டு அறை அமைப்பது உள்ளிட்ட புது விதிமுறைகள் வகுக்கப்பட்டு, அரசிடம் அளிக்கப்பட்டு உள்ளன. அதை இறுதி செய்து, தமிழக அரசு விரைவில் அறிவிக்கும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை