அரசு ஊழியர்கள் சரண் விடுப்பு சலுகை அக்டோபரில் அமல்
சென்னை:அரசு ஊழியர்கள் சரண் விடுப்பு பணப்பலன் பெறும் நடைமுறை, அக்டோபர் 1 முதல் மீண்டும் செயல்படுத்தப்படுகிறது.கொரோனா தொற்று காலத்தில், அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்களது ஓராண்டுக்கான ஈட்டிய விடுப்பை சரண் செய்து, பணப்பலன் பெறும் முறை 2021ல் நிறுத்தப்பட்டது. அதை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த சலுகை, 2026ல் மீண்டும் துவங்கப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால், நடப்பாண்டே இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. அதை ஏற்று, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் சரண் விடுப்பு பணப்பலன்களை, அக்டோபர் 1ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஓராண்டில், 15 நாட்கள் வரை விடுப்பை சரண் செய்து, அதற்கான ஊதியத்தை அரசு ஊழியர்கள் பெற முடியும்.