உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக் ஊழியர்கள் குறைகளை ஆய்வு செய்ய குழு அமைப்பு ஐகோர்ட்டில் அரசு தகவல்

டாஸ்மாக் ஊழியர்கள் குறைகளை ஆய்வு செய்ய குழு அமைப்பு ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை:காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் தொடர்பாக, ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.சுற்றுச்சூழல் பாதிப்பை கருத்தில் கொண்டு, 'டாஸ்மாக்' கடைகளில் மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்த திட்டம் மாநிலம் முழுதும் அமல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்படி, டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது பாட்டிலுக்கு, கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படும். காலி பாட்டில்களை திரும்ப தரும்பட்சத்தில், அந்த 10 ரூபாய் திருப்பிக் கொடுக்கப்படும். இந்த பணிகளுக்கு, தனியாக ஊழியர்களை நியமிக்கக் கோரியும், காலி பாட்டில்களை வைக்க தனி இடம் உள்ளிட்ட வசதிகள் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுஉள்ளது.இந்த வழக்கு, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன், நேற்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ''காலி மது பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் தொடர்பாக, ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. மனுதாரர் சங்கம், அந்த குழுவை அணுகலாம்,'' என்றார்.இதைக் கேட்ட நீதிபதி, இதுதொடர்பாக மனு தாக்கல் செய்ய, அரசு தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 1ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ