அரசு நிலம் அபகரிப்பு: ரவுடி சீசிங் ராஜாவுக்கு ரூ.40 லட்சம் கமிஷன்
சென்னை:அரசு நிலத்தை அபகரித்த விவகாரத்தில், கமிஷன் தொகையாக ரவுடி சீசிங் ராஜாவுக்கு, 40 லட்சம் ரூபாய் கைமாறி இருப்பது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.சென்னை கிழக்கு தாம்பரம், ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சீசிங் ராஜா, 51. இவர் நீலாங்கரையில், செப்., 23ல், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். முன்னதாக, சென்னை சேலையூர் போலீஸ் நிலைய எல்லையில், அகரம்தென் என்ற கிராமத்தில், ஒரு ஏக்கர், 18 சென்ட் அரசு நிலத்தை அபகரிக்க, இவர் உடந்தையாக இருந்தது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக, சீசிங் ராஜாவின் மூன்று மனைவியர், உறவினர்கள் வீடு என, 14 இடங்களில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். அவற்றை ஆய்வு செய்ததில், அரசு நிலம் அபகரித்த விவகாரத்திற்கு கமிஷனாக, சீசிங் ராஜாவுக்கு இரு தவணைகளாக, 40 லட்சம் ரூபாய் கைமாறி இருப்பது தெரியவந்துள்ளது. ஆவணங்கள், நில வரைபடங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் குறித்து, போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.