புயல் நிவாரண மையங்களுக்கு உணவு தானியங்கள் வினியோகம் அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு
சென்னை:''நிவாரண மையங்களுக்கு உணவு தானியங்களை விரைந்து வழங்க, கலெக்டர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,'' என, மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு, கூட்டுறவு மற்றும் உணவு துறை செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.'பெஞ்சல்' புயலால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலுார் மாவட்டங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கனமழை பெய்தது. இதனால், தண்ணீர் தேங்கிய தாழ்வான இடங்களில் வசித்த மக்கள், நிவாரண மையங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அரசின் சார்பில் உணவு வழங்கப்படுகிறது. எனவே, நிவாரண மையங்களுக்கு தேவைப்படும் உணவு தானியங்களை விரைந்து வழங்குமாறு, மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைக்க கூட்டுறவு இணை பதிவாளர்கள், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர்கள், பொது வினியோக திட்ட துணை பதிவாளர்கள், வட்ட வழங்கல் அதிகாரிகள் குழுவாக பணிபுரிய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மாவட்ட நிவாரண மையங்களுக்கு, அரிசி உட்பட பிற உணவு தானியங்கள் தேவைப்பட்டால், மாவட்ட வழங்கல் அதிகாரிகள் விரைந்து வழங்க வேண்டும். இதற்காக, கலெக்டர்கள், சென்னை மாநகராட்சி கமிஷனருடன், மாவட்ட வழங்கல் அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படுமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. நேரடி கொள்முதல் நிலையங்களில் வைக்கப்படும் நெல், மழையில் சேதம் அடையாமல் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள தானியங்களை பாதுகாக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.