உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கலைநிகழ்ச்சி நடத்த பணம் இல்லை தவிக்கும் அரசு பள்ளிகள்

கலைநிகழ்ச்சி நடத்த பணம் இல்லை தவிக்கும் அரசு பள்ளிகள்

கலைத்திருவிழா போட்டிகளில் பங்கேற்கும், அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவ, பள்ளிகளுக்கு அரசு தனி நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களின் கலைத்திறமைகளை ஊக்குவிக்க, கடந்த மூன்று ஆண்டுகளாக கலைத்திருவிழா நடத்தப்படுகிறது. இதில், இலக்கிய நாடகம், நாட்டுப்புற நடனம், ஓவியம் உள்ளிட்ட, 34க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த போட்டிகளை நடத்த அரசு நிதி ஒதுக்கினாலும், போட்டிகளுக்கு மாணவர்களை தயார் செய்வதற்கான செலவுகளை, ஆசிரியர்களும் மாணவர்களுமே ஏற்க வேண்டியுள்ளது. நடனம், நாடகம் போன்ற பிரிவுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான உடை, சிகை அலங்காரம், மற்றும் போட்டிக்கு தேவையான இதர பொருட்களுக்கான செலவுகள் அனைத்தையும் ஆசிரியர்களும், மாணவர்களுமே ஏற்க வேண்டியுள்ளது. ஆசிரியர்கள் கூறுகையில், 'கட்டைக்கால் நடனம், இலக்கியம், நாடகம் போன்ற போட்டிகளில் மாணவர்கள் பயன்படுத்தும் பொருட்கள், உடை ஆகியவற்றுக்கு குறைந்தது 10,000 ரூபாய் வரை செலவாகிறது. 'அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களால், இந்த செலவுகளை ஏற்க முடிவதில்லை. இதனால் திறமையிருந்தும், பங்கேற்பதை தவிர்க்கின்றனர்' என்றனர். மாணவர்களை மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளுக்கு அழைத்துச் செல்லும் போக்குவரத்து செலவுகளையும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களே பகிர்ந்து கொள்ளும் நிலை உள்ளது. எனவே, போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான செலவுகளுக்காக, அரசு பள்ளிகளுக்கு தனியாக ஒரு தொகையை, அரசு ஒதுக்க வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை