உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அவமதிப்பு வழக்கில் அரசு செயலர் ஆஜராக உத்தரவு

அவமதிப்பு வழக்கில் அரசு செயலர் ஆஜராக உத்தரவு

சென்னை:'நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசின் சமூக நலத்துறை செயலர், ஏப்., 1ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம், சேர்விளாகம் ஊராட்சியைச் சேர்ந்தவர் விக்ரம், 31. இவரது தாய் தங்கம், அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணிபுரிந்து வந்தார். உடல்நலக்குறைவால் தங்கம், கடந்த 2014ல் மரணமடைந்தார். பின், கருணை அடிப்படையில், தனக்கு பணி வழங்க கோரி, அரசிடம் விக்ரம் விண்ணப்பம் செய்தார்.ஆனால், ஐந்து ஆண்டு களுக்குப் பின், 'தமிழக அரசின் அரசாணைப்படி, பெண் வாரிசுகளுக்கு மட்டுமே சத்துணவு பணியாளர்களுக்கான பணி வழங்க முடியும்' எனக் கூறி நிராகரிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் விக்ரம் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரரின் விண்ணப்பத்தை மீண்டும் பரிசீலித்து, எட்டு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்கும்படி உத்தரவிட்டது. ஆனால், மீண்டும் தன் விண்ணப்பத்தை நிராகரித்ததாக குற்றம்சாட்டி, சமூக நலத் துறை செயலர் மீது நடவடிக்கை கோரி விக்ரம், அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், அரசு அதிகாரியின் நடத்தை, நீதிமன்ற உத்தரவுக்கு கீழ்படியாததைக் காட்டுகிறது என்பதால், ஏப்., 1ல் சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி