உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரு மதத்தின் சொத்து மற்றும் நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது: சிதம்பரம் பேச்சு

ஒரு மதத்தின் சொத்து மற்றும் நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது: சிதம்பரம் பேச்சு

சென்னை: ''ஒரு மதத்தின் சொத்து, வழிபாடு மற்றும் நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது. எனவே, வக்ப் திருத்த சட்டம் செல்லாது என உச்ச நீதிமன்றம் அறிவிக்கும்,'' என்று, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார். வக்ப் திருத்த சட்டத்திற்கும், பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கும் எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று சென்னை சைதாப்பேட்டையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில் சிதம்பரம் பேசியதாவது:பழைய வக்ப் சட்டத்தில், யார் வேண்டுமானாலும் நிலம் தானமாக வழங்கலாம். இதை நீதிமன்றமே அனுமதித்து உள்ளது. முஸ்லிம்கள் இடுகாட்டிற்கு, பணம் மற்றும் நிலம் போன்றவற்றை நானே கொடுக்கலாம். ஆனால், இனிமேல் என்னால்கூட கொடுக்க முடியாது. இனிமேல் பத்திரம் வாயிலாகவே கொடுக்க முடியும். அதுவும், ஐந்து ஆண்டுகளாக முஸ்லிம் மதத்தை பின்பற்றுபவர் தான், பத்திரம் எழுத முடியும். இது, ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு இல்லாத விதி. புதிய வக்ப் திருத்த சட்டத்தின்படி, முஸ்லிம் அல்லாதவர்கள் குழுவில் நியமிக்கப்படலாம். ஹிந்து கோவில் அறங்காவலர்களாக முஸ்லிம்களை நியமிக்க முடியுமா?திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் ஹிந்துக்கள் மட்டுமே உள்ளனர். ஆனால், பணியாளர்களாக மற்ற மதத்தினரும் இருந்தனர். இனிமேல் பணியாளர்களில் ஹிந்துக்கள் மட்டுமே இருக்க வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ள நிலையில், வக்ப் வாரியத்தில் மட்டும் எப்படி ஹிந்துக்களை நியமிக்க முடியும்? ஒரு மதத்தின் சொத்து, வழிபாடு, நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது. அரசு தலையிடுவது மிகப்பெரிய பிழை. இந்த சட்டம் செல்லாது என உச்ச நீதிமன்றம் அறிவிக்கும். மத சார்பற்ற இந்திய நாட்டில், ஹிந்து ராஷ்ட்ரா என்ற தவறான கொள்கையை கொண்டு வர, பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., முயற்சிக்கின்றன.இவ்வாறு அவர் பேசினார்.

சிதம்பரம் பேச்சு வேடிக்கையாக உள்ளது

பா.ஜ., அர்ஜுனமூர்த்தி பதிலடிசிதம்பரம் பேச்சு குறித்து, தமிழக பா.ஜ., சமூக ஊடகப்பிரிவு பார்வையாளர் அர்ஜுனமூர்த்தி கூறியதாவது:நாட்டிற்கு ஒன்பது முறை பட்ஜெட் போட்ட சிதம்பரம், ஒரு மதத்தின் சொத்து, வழிபாடு, நிர்வாகத்தில் அரசு தலையிடுவது தவறு எனச் சொல்வது வேடிக்கையாகவும், வினோதமாகவும் இருக்கிறது. நகரத்தார்கள் கோவில்களுக்கு சேவை செய்யக்கூடியவர்கள். அப்படியிருக்கும் போது, சிதம்பரம் இப்படி ஒரு கருத்தை தெரிவித்தது, சொற்ப ஓட்டுக்காக, அரசியலுக்காக, அவர் பேசுவது போல இருக்கிறது.அகில இந்திய அளவில் வக்ப் வாரியத்திற்கு, 9 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. தமிழகத்தில் வக்ப் நிலம் 71,440 ஏக்கர் உள்ளது. தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு, 1986ம் ஆண்டில், 5.25 லட்சம் ஏக்கர் நிலம் இருந்தது; 2008ல், 4.78 லட்சமாக குறைந்து விட்டது. கடந்த ஆண்டு தனியார் நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில், 3.43 லட்சம் ஏக்கர் நிலம் மட்டுமே இருப்பது தெரிய வந்துள்ளது.இதற்கு காரணம், அரசு நிர்வாகம் தவறாக செயல்படுகிறது. வக்ப் நிலத்திற்கு குரல் கொடுக்கும் சிதம்பரம், அறநிலையத்துறை கோவில் நிலம் குறைந்து வருவது குறித்து ஏன் குரல் கொடுக்கவில்லை? மசூதியில் தங்கம் இருப்பு கிடையாது. ஆனால், கோவில்களில் வைரம், வைடூரியம், மாணிக்கம், மரகதம் போன்ற நகைகள், மன்னர்கள் காலத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு கணக்குகள் இல்லை.வக்ப் நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது எனக் கூறும் சிதம்பரம், கோவில் நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது என்று கூறுவாரா? பல்லாயிரம் கோவில்களுக்கு சேர வேண்டிய மானியங்கள், குத்தகைகள், வாடகை, வருவாய் போன்றவை குறித்து, அறநிலையத்துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

adalarasan
ஏப் 07, 2025 22:15

சிதம்பரம், சார், தாங்கள் சொல்வது, இந்து அரா நிலத்திற்கும் செல்லும் அல்லவா? ழுங்கு முறை படுத்தினால், தலையிட்டால் ஆகாது. 1995 வருடம், காங்கிரஸ் ஏன், வாக்ட் ளவிற்கு,AMENDMENT, செய்தது ?


SAMANIYAN
ஏப் 07, 2025 09:14

அப்பொழுது இந்து அறநிலையத்துறை மட்டும் எதற்கு?? அதற்கு ஏன் தாங்கள் போராடவில்லை ..இதெல்லாம் ஒரு பொலப்பு ...தமிழக இந்து மக்களை சொல்ல வேண்டும் ..ரோசம் அற்றவர்கள் ,கொத்தடிமைகள் தான் என் தமிழக இந்துக்கள்..


சமீபத்திய செய்தி