உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேங்கைவயல் பற்றி கூட்டணி கட்சிகள் பேசுவது தவறான தகவல்: மார்க்சிஸ்ட், வி.சி., கட்சிகளுக்கு அரசு எச்சரிக்கை

வேங்கைவயல் பற்றி கூட்டணி கட்சிகள் பேசுவது தவறான தகவல்: மார்க்சிஸ்ட், வி.சி., கட்சிகளுக்கு அரசு எச்சரிக்கை

சென்னை: 'வேங்கைவயல் சம்பவம் குறித்து, தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம்' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில், பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதாக, 2022 டிசம்பரில் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக, வெள்ளானுார் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விசாரணை

இக்குற்றச்சாட்டின் தீவிரத்தையும், சமூக முக்கியத்துவத்தையும் கருதி, வழக்கு 2023 ஜனவரி 14ல் சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. விசாரணையின் போது, புகார்தாரர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட, 100க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்; ஏராளமான ஆவணங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. பல நபர்களின் மொபைல் போன் எண்கள், தொலைதொடர்பு தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. வேங்கைவயல், எறையூர் கிராம மக்களிடம், இதற்கான பல்வேறு காரணங்கள் குறித்தும் விரிவாக விசாரிக்கப்பட்டது.

பராமரிப்பு

மேலும், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சில நபர்களிடமிருந்து உயிரியல் மாதிரிகள் எடுக்கப்பட்டு, விரிவான டி.என்.ஏ., என்ற மரபணு பகுப்பாய்வும் செய்யப்பட்டது. சம்பவம் நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன், அதாவது 2022 அக்டோபர் 2ம் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில், வேங்கைவயலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு குறித்து, தமிழக காவல் துறை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் காவலர் முரளிராஜாவின் தந்தை ஜீவானந்தம் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்காக அவரை, முத்துக்காடு ஊராட்சி தலைவர் பத்மாவின் கணவர் முத்தையா, அவமானப்படுத்தும் விதமாக திட்டியுள்ளார். இச்சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில், முரளிராஜாவால் இச்செயல் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது என்பது, காவல் துறை விசாரணையில் ஆதாரப்பூர்வமாக புலனாகியுள்ளது.இச்சம்பவத்தில் முரளி ராஜா, சுதர்ஷன், முத்தையா, முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட பலரின் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது, அவற்றில் இந்தச் சம்பவம் தொடர்பான பல புகைப்படங்களும், உரையாடல்களும் அழிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.இந்தத் தகவல்கள் அனைத்தும் தொழில்நுட்ப உதவியோடு மீட்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டதில், இச்சம்பவத்தில் அவர்களுக்குள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்டது. விசாரணையில் பெறப்பட்ட புகைப்படங்கள், மொபைல் போன் உரையாடல்கள், வீடியோ ஆதாரங்கள், தடயவியல் அறிக்கை, மருத்துவ அறிக்கைகள், புலனாய்வு அதிகாரியால் செய்யப்பட்ட செயல்முறை விளக்கங்களின் முடிவுகள், தமிழக மின் வாரியத்தின் அறிக்கை, வல்லுனர்களின் கருத்துகள் மற்றும் சாட்சிகளின் அறிக்கைகள் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்ததன் அடிப்படையில், புலன் விசாரணை முடிக்கப்பட்டது.அதன்பின், வேங்கைவயலைச் சேர்ந்த முரளிராஜா, சுதர்ஷன், முத்துகிருஷ்ணன் ஆகியோரின் மீது, கடந்த 20ம் தேதி நீதிமன்றத்தில், சி.பி.சி.ஐ.டி., சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக தவறான தகவல்களை, யாரும் பரப்ப வேண்டாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ