இரண்டு மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்
சென்னை:தமிழக தனியார் பல்கலை சட்ட திருத்தம், பொது கட்டடங்கள் உரிம சட்ட திருத்தம் ஆகிய இரு சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழக கவர்னர் ரவி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என, கடந்த 8ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த தீர்ப்பு வந்த பிறகு, இரண்டு சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.தமிழகத்தில் தனியார் பல்கலை சட்டத்தில் திருத்தம் செய்வது, பொது கட்டடங்களுக்கு உரிமம் வழங்கும் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான சட்ட மசோதாக்கள், கடந்த டிசம்பரில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன. அவை கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன. தனியார் பல்கலை சட்ட திருத்த மசோதாவுக்கு, ஏப்ரல், 9ம் தேதியும், பொது கட்டடங்கள் உரிம சட்ட திருத்த மசோதாவுக்கு ஏப்ரல், 10ம் தேதியும் கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.இந்த இரண்டு சட்டத்திருத்தங்களும், தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.