உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவருக்கு கட்டுரை போட்டி; கவர்னர் மாளிகை அறிவிப்பு

மாணவருக்கு கட்டுரை போட்டி; கவர்னர் மாளிகை அறிவிப்பு

சென்னை: அரசியலமைப்பு தினம் மற்றும் பாரதியார் பிறந்த நாளையொட்டி, கவர்னர் மாளிகை சார்பில், மாணவ - மாணவியருக்கு கட்டுரை போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலைப்பு தினம் வரும் நவ., 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழக கவர்னர் மாளிகை சார்பில், பள்ளி - கல்லுாரி மாணவ - மாணவியருக்கான கட்டுரை போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 'வேற்றுமையில் ஒற்றுமை; நம்மை இணைக்கும் அரசியலைப்பு சட்டம்' என்ற தலைப்பிலும், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, 'தேசிய இலக்குகளை எட்ட வழிகாட்டும் அரசு நெறி கோட்பாடுகள்' என்ற தலைப்பிலும் போட்டிகள் நடக்கும். பல்கலை, கல்லுாரி மாணவர்கள், 'அடிப்படை கடமைகள் மற்றும் தேசத்தை கட்டமைத்தலில் அடிப்படை கடமைகளை சட்டப்பூர்வமாக்குதலின் தேவை' என்ற தலைப்பில் கட்டுரை எழுதலாம். அதேபோல், டிச., 11ல் நடக்கும், 144வது பாரதியாரின் பிறந்த நாளையொட்டி, பள்ளி - கல்லுாரி மாணவ, மாணவியருக்கான கட்டுரை போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ - மாணவியர், 'பாரதியார்: பாரதத் தாயின் தவப்புதல்வர்' என்ற தலைப்பிலும், கல்லுாரி மாணவ - மாணவியர், 'பாரதியாரின் பார்வையில் இந்தியாவின் பன்மொழி சிறப்புகள்' என்ற தலைப்பிலும் கட்டுரை எழுதலாம். மாணவர்கள் அரசியலமைப்பு தின கட்டுரைகளை, செப்., 20க்கு முன்பாகவும், பாரதியார் பிறந்த நாள் கட்டுரைகளை, செப்டம்பர் 30ம் தேதிக்கு முன்பாகவும், 'கவர்னரின் துணை செயலர், ராஜ்பவன், சென்னை - 600 022' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, அடுத்த ஆண்டு ஜனவரியில் நடக்கும் குடியரசு தின விழாவில், பரிசுகள் வழங்கப்படும் என கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி