சென்னை : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, 1,200 குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, 'டிக்' எனப்படும், தமிழக அரசின் தொழில் முதலீட்டு கழகம், 33 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில், 2023 டிசம்பர் துவக்கத்தில் வீசிய, 'மிக்ஜாம்' புயலால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அம்மாத இறுதியில் அதீத கன மழையால், துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால், மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள 4,000க்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் தண்ணீர் புகுந்து, இயந்திரம் மற்றும் தளவாடங்கள் நீரில் மூழ்கின; மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களும் நீரில் நனைந்து நாசமாகின.எனவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு தொழில் நிறுவனங்களுக்கு, 'டிக்' நிறுவனம் வாயிலாக சிறப்பு கடன் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் 2023 டிசம்பரில் அறிவித்தார். டிக் மற்றும் மாவட்ட தொழில் மையங்களுடன் இணைந்து சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, ஒரு நிறுவனத்திற்கு 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்கு, 6 சதவீதம் வட்டி. இதுவரை, 1,200 தொழில் நிறுவனங்களுக்கு, 33 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு உள்ளது. இது குறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சிறப்பு கடன் திட்டத்தின் கீழ், 100 கோடி ரூபாய்க்கு கடன் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. எனவே, குறைந்த வட்டி, தவணை செலுத்த கூடுதல் அவகாசம் என, பல சலுகைகளுயுடன் கூடிய கடனை பெற்று, சிறு நிறுவனங்கள் பயன் பெறலாம்' என்றார்.